தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தஞ்சாவூரில் கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி.. மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!

Thanjavur news: தஞ்சாவூர் அருங்காட்சியக வளாகத்தில் அழிந்து வரும் தஞ்சாவூர் கண்ணாடி கலைப் பொருட்களை மீட்கும் வகையில் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.

தஞ்சாவூர் கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி
தஞ்சாவூர் கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 20, 2024, 10:33 PM IST

தஞ்சாவூர் கண்ணாடி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தஞ்சாவூர்:தஞ்சாவூரில் இயல், இசை, நாட்டியம் மற்றும் நாடகக் கலை மட்டுமின்றி கைவினை கலைப்பொருட்கள் சிறப்புப் பெற்றதாகும். தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்கள் காலத்தில் பல கலைகள் தஞ்சைக்கு வந்தன. அதன் பின் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர்கள் காலத்தில் மொகலாய கலைப் பாணியும், ஆங்கிலேய கலை பாணிகளும் சேர்க்கப்பட்டது.

மராட்டிய மன்னர்கள் இரண்டாம் சரபோசியின் காலத்தில் ஓவியம், மற்றும் இதர கலைப்பொருட்கள் தயாரிப்பில் மேன்மையுற்றிருந்தன. தஞ்சையில் மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட கலைகளில் கண்ணாடி கலைப் பொருட்களும் ஒன்று. பல்வேறு அளவுகளைக் கொண்ட கண்ணாடித் துண்டுகளைக் கொண்டு பலவகையான கலைப் பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. ஆரம்பக் காலங்களில் கோயில் பள்ளியறை மண்டபம், பல்லக்கு போன்ற கோவில் தொடர்பான பொருட்கள் மட்டுமே செய்யப்பட்டது.

பின் திருமண மண்டபம், வாகன அலங்காரம், பூரணகும்பம், அலங்காரத் தட்டு, வீடுகளில் பூஜை மண்டபம், குடம், செம்பு, கூம்பு போன்ற அலங்காரப் பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன. தாம்பூலத் தட்டு, சந்தனக் கிண்ணம், குங்கும சிமிழ், நகைப் பெட்டி போன்றவை தற்போதும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்தியாவிலேயே அதிகமான புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் தஞ்சாவூர் மாவட்டத்தில்தான் உள்ளது.

இந்த கலைப் பொருட்களுக்கு வெளிநாடுகளில் குறிப்பாக ஜப்பான் போன்ற நாடுகளில் அதிக வரவேற்பு இருக்கின்றது. இந்நிலையில் அழிந்து வரும் இந்த கண்ணாடி கலைப் பொருட்களைப் புத்துணர்வு கொடுக்கப்பட்டு மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் மாவட்ட தொழில் மையம் மூலமாகத் தொடர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும் எனவும், தஞ்சாவூர் கண்ணாடி கலைப்பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சியும் மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தீபக்ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

மேலும் தஞ்சாவூர் மாவட்ட சுற்றுலா வளர்ச்சி குழுமத்தின் சார்பில் ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிற்றுக்கிழமை பாரம்பரிய நடைப்பயணமும், இரண்டாவது சனிக்கிழமை பாரம்பரிய சொற்பொழிவு நிகழ்வும், மூன்றாவது சனிக்கிழமை கைவினை கலைப் பொருள் பயிற்சி முகாமும், நான்காவது சனிக்கிழமை கிராமிய கலை நிகழ்ச்சியும் தொடர்ந்து ஆண்டு முழுவதும் நடத்தப்படும் என தெரிவித்தார்.

இதனையடுத்து, ஆட்சியர் அலுவலக அருங்காட்சியகத்தில் தஞ்சாவூர் கண்ணாடி கலைப்பொருள், 50 ஆண்டுகளாகத் தயாரிக்கும் கலைஞர்கள் செல்வராஜ் -வனஜா தம்பதியினர் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களுக்குச் செயல்முறை விளக்கப் பயிற்சி வழங்கினர். இதில் ரசம் பூசப்பட்ட கண்ணாடிகள், பாரம்பரிய பச்சை மற்றும் சிவப்பு நிற வண்ணம் பூசப்பட்ட கண்ணாடிகள், தங்கப்பட்டை, சுக்கான் தூள், புளியங்கோட்டை பசை ஆகியவை பயன்படுத்தப்படுவதாகவும் எவ்வாறு செய்ய வேண்டும் என விளக்கமாகச் செய்து காண்பித்தனர்.

பங்கு பெற்ற அனைவரும் குழுக்களாகப் பிரிந்து ஒவ்வொரு கண்ணாடி கலைப் பொருட்களை உருவாக்கினர். இக்கலைப் பொருட்களைத் தஞ்சையில் ஒரு சில குடும்பங்கள் மட்டுமே தற்போது செய்து வருவதாகவும் இது போன்ற பயிற்சிகள் இந்த கலை அழியாமல் காப்பதற்கு உதவியாக அமையும் இளைஞர்களுக்கு நல்ல தொழில் வாய்ப்பை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க:ராமேஸ்வரத்தில் பிரதமர் மோடி! அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி சாமி தரிசனம்!

ABOUT THE AUTHOR

...view details