சென்னை: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக தலைமை அலுவலத்தில் எரிசக்தித் துறை மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதனை செயல்படுத்துதல் குறித்த ஆய்வுக் கூட்டம் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் இன்று (ஆக.28) நடைபெற்றது. இந்த ஆய்வுக் கூட்டத்தில், நடப்பு நிதி ஆண்டுக்குள் முடிக்கப்பட வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இதுவரை அறிவிக்கப்பட்ட 108 அறிவிப்புகளில் 1,50,000 இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்குதல், 3 புதிய மின் பகிர்மான மண்டலங்கள் அமைத்தல், ஸ்ரீரங்கநாதர் திருக்கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோயில், கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமி திருக்கோயில் மற்றும் சுசீந்திரம் தாணுமாலயன் திருக்கோயில் ஆகிய கோயில்களின் தேரோடும் வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகளை புதைவடங்களாக மாற்றி அமைத்தல் உள்ளிட்ட 28 முக்கிய அறிவிப்புகள் முழுமையாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 78 அறிவிப்புகளுக்கான பணிகள் பல்வேறு நிலைகளில் துரிதமாக நடைபெற்று வருகிறது. பணிகளை முடிப்பதற்கு தேவையான தளவாட பொருட்கள் மற்றும் மின் சாதனங்களை விரைந்து கொள்முதல் செய்வதற்கு
உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும், பணிகளை விரைந்து முடித்து குறித்த காலத்திற்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வருமாறும் அறிவுரை வழங்கினார்.
மேலும், வருகின்ற வடகிழக்கு பருவ மழையினை எதிர்கொள்ளவும், தடையில்லா சீரான மின்சாரம் வழங்குவதற்காகவும், கடந்த ஜூலை 1 முதல் ஒருங்கிணைந்த பராமரிப்பு பணிகள் தமிழ்நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.