மயிலாடுதுறை: மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமை பொதுக்குழு கூட்டம், நேற்று (பிப்.28) மயிலாடுதுறையில் நடைபெற்றது. தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம் நிறைவடைந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “மனிதநேய ஜனநாயக கட்சி 9ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறையில் பொதுக்குழு கூட்டத்தை நடத்தினோம். சோதனைகளை எல்லாம் சாதனையாக்கி, அதிகார மையங்கள் நோக்கிய வெற்றிப்பயணம் தொடங்கும் என்று தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
வரும் 2024 லோக்சபா தேர்தலில், கட்சி எத்தகைய நிலைபாடு எடுக்க வேண்டுமென்று தீர்மானத்தை தலைமை நிர்வாகக் குழுவிற்கு அதிகாரம் வழங்குவதென்றும், அரசியல் சூழலைக் கொண்டு தலைமை நிர்வாகக்குழு முடிவெடுக்க பொதுக்குழு அறிவுறுத்தியுள்ளது. இன்றைய சூழலில், எந்த கட்சியிலும் முடிவு எட்டப்படாமல் இருக்கிறது. தலைமை நிர்வாகக்குழு கூட்டம் சென்னையில் நடைபெறும். அதில் எங்களுக்கான வாய்ப்பு என்ன என்பதை பற்றி ஆய்வு செய்து முடிவை அறிவிப்போம்.
கட்சியில் எந்த பிளவும் ஏற்படவில்லை. தவறான வதந்திகள் பரவுகிறது. இந்தியாவின் அரசியல் மரபுகளை நாசம் செய்யும் பாஜக இருக்கும் கூட்டணியில் நிச்சயம் இடம்பெற மாட்டோம். தமிழகத்தில் 4-வதாக வரக்கூடிய ஒரு அணிதான் பாஜக. மூப்பனார் பின்பற்றிய மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்பாட்டில் ஜி.கே.வாசன் ஈடுபடுகிறார். அவரது கட்சியை அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்கிறார்.
மதில்மேல் பூனை போன்று இருக்கக்கூடிய மக்களை இழுக்கும் வகையிலும், மக்களை மனசஞ்சலப்படுத்தும் வகையிலும் 400 தொகுதியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று பாஜகவினர் கூறுகின்றனர். இவிஎம் மெஷினில் ஒப்புகைச் சீட்டை கண்டிப்பாக வழங்க வேண்டும். ஒப்புகைச் சீட்டை சரிபார்ப்பதன் மூலமாக, தேர்தல் முடிவை வெளியிட வேண்டும். பாஜக தவிர்த்த அனைத்து கட்சிகளுக்கும் ஓட்டு மெஷின் மீது அய்யப்பாடு ஏற்பட்டுள்ளது.