ஈரோடு:சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் தாளவாடி வனப்பகுதியில் பிரதான தொழிலாக விவசாயம் இருக்கிறது. இங்கு காட்டு யானைகள், பகல் மற்றும் இரவு நேரங்களில் வனப்பகுதியை விட்டு வெளியேறி, அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து, விவசாயத் தோட்டங்களில் உள்ள பயிர்களைச் சேதப்படுத்துவது தொடர் கதையாகி வருகிறது.
விவசாய நிலங்களுக்கு இரவு நேரக் காவலுக்குச் செல்லும் விவசாயிகளை யானை தாக்கி உயிரிழப்பது அப்பகுதி மக்களை பெரும் கவலைக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில், இன்று காலை நெய்தாளபுரத்தில் தோட்டத்துக்குச் சென்ற மூதாட்டி காளம்மாவை (70), அவ்வழியாகச் சென்ற யானை தாக்கியதில் மூதாட்டி உயிரிழந்தார். இதையடுத்து, அப்பகுதி விவசாயிகள் ஊருக்குள் புகுந்து காளம்மாவை தாக்கிய யானையை காட்டுக்குள் விரட்டினர்.
பின்னர், உயிரிழந்த காளம்மாவின் உடலை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், அங்கு வந்த விவசாயிகள், யானையால் கொல்லப்படும் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, யானைகளை கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுக்கும் வரை பிரேதப் பரிசோதனை செய்ய விடமாட்டோம் எனக் கூறி, தாளவாடி அரசு மருத்துவமனை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.