தூத்துக்குடி:விளாத்திகுளம் அருகே தனது அக்கா மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு தாய் மாமன்கள் 2 பேர், 350 சீர்வரிசைகளை மேள, தாளங்கள் முழங்க கண்டெய்னர் லாரியில் கொண்டுச் சென்றுள்ளனர்.
ஓட்டப்பிடாரம் அருகே சங்கர ராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பவித்குமார், சூர்யா. இவர்களது சகோதரி ஆனந்தி. இவர் விளாத்திகுளம் அருகே நாகலாபுரத்தைச் சேர்ந்த ஆசைத்தம்பி என்பவரை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு சபீஷ்னா என்ற மகள் உள்ளார். இந்நிலையில், சபீஷ்னாவிற்கு மஞ்சள் நீராட்டு விழா நேற்று (நவ.14) நாகலாபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு ஆனந்தியின் உடன் பிறந்த சகோதரர்களான சங்கரராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த பவித்குமார் மற்றும் சூர்யா இருவரும், தங்களது மருமகளின் மஞ்சள் நீராட்டு விழாவில் தாய்மாமன் முறையை சிறப்பாக செய்ய வேண்டும் என எண்ணி, பட்டுச்சேலை, தங்க நகை, வளையல், அண்டா, பாத்திரங்கள், இனிப்புகள், பழங்கள் என ஏராளமான பொருட்கள் அடங்கிய 350 தாம்பூல தட்டுகளை கண்டெய்னர் லாரியில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளனர்.
சீர்வரிசை சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் ஊர்வலமாக கொண்டு சென்ற நிலையில், வழிநெடுங்கிலும் பட்டாசுகள் வெடித்து, வான வேடிக்கையுடன் கேரளா செண்டை மேளம் முழங்க, உறவினர்களுடன் உற்சாகமாக ஆட்டம் பாட்டத்துடன் நாகலாபுரத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்குச் சென்றுள்ளனர். அவ்வாறு செல்லும் வழி நெடுகிலும், ஊர் மக்களின் கண்களை கவரும் வகையில், லைட் ஷோ(COLOURFUL LIGHT SHOW) மற்றும் வண்ண பேரப்பர்கள்ளை (COLOUR PAPER SHOT) பறக்கவிட்டுள்ளனர்.