தென்காசி: கடையநல்லூர், சேர்ந்தமரம் அருகே உள்ள கடம்பங்குளம் பகுதியை சேர்ந்தவர் மதன். இவர் தனது நிலத்திற்கு பட்டா கேட்டு சேர்ந்தமங்களம் கிராம நிர்வாகத்திடம் விண்ணப்பம் செய்த நிலையில், உரிய ஆவணங்கள் இல்லை என கூறி பட்டா வாங்குவதற்காக நீண்ட காலமாக அலக்கழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, மதன் சேர்ந்தமரம் கிராம நிர்வாக அதிகாரியான மாடசாமியிடம் பட்டா குறித்த விண்ணப்பத்தின் காலம் தாமதம் குறித்து விளக்கம் கேட்டபோது, பட்டா வழங்க ரூபாய் 10 ஆயிரம் கொடுக்க வேண்டும் என கூறியதாக சொல்லப்படுகிறது.
வி.ஏ.ஓ லஞ்சம் கேட்டதை தொடர்ந்து, மதன் தென்காசி லஞ்ச ஒழிப்பு காவல் துறையினருக்கு புகார் அளித்துள்ளார். இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு துறையினர் மதனிடம் கிராம நிர்வாக அதிகாரியான மாடசாமியை தொடர்பு கொண்டு பணம் கொடுப்பதாக தெரிவிக்க சொல்லியுள்ளனர்.
இதனை தொடர்ந்து, மதன் வி.ஏ.ஓ மாடசாமியை தொடர்பு கொண்டு கிருஷ்ணாபுரம் பேருந்து நிலையம் அருகே வர சொன்னதாக கூறப்படுகிறது. அதன்படி, லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயம் தடவிய ரூபாய் 10 ஆயிரத்தை மதனிடம் கொடுத்து வி.ஏ.ஓ மாடசாமியிடம் கொடுக்க கூறியுள்ளனர்.
இந்நிலையில், மதனிடம் வி.ஏ.ஓ மாடசாமி பணத்தை வாங்கும்போது பேருந்து நிலையம் அருகே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து, கைது செய்யப்பட்ட மாடசாமியை கடையநல்லூர் தாலுகா நிலையத்திற்கு கொண்டுவந்து லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டா மாறுதலுக்காக வி.ஏ.ஓ ரூபாய் 10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:"செய்வதெல்லாம் செய்துவிட்டு பிரதமர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார்" - திருச்சியில் மு.க.ஸ்டாலின் பரப்புரை! - Lok Sabha Election 2024