தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“திமுகவினர் நாடாளுமன்றத்தில் உறங்குகிறார்கள்” - ஜான் பாண்டியன் கடும் விமர்சனம்! - lok sabha election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha election 2024: “திமுக எப்போது தேர்தல் வந்தாலும் சரி, பணத்தைக் கொடுத்து வியாபாரம் செய்து நாடாளுமன்றம் சென்று படுத்து உறங்கி வருகிறார்கள்” என தென்காசி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

திமுக பணம் கொடுத்து வியாபாரம் செய்து, நாடாளுமன்றத்தில் படுத்து உறங்குகிறார்கள்
திமுக பணம் கொடுத்து வியாபாரம் செய்து, நாடாளுமன்றத்தில் படுத்து உறங்குகிறார்கள்

By ETV Bharat Tamil Nadu Team

Published : Apr 17, 2024, 4:16 PM IST

Updated : Apr 17, 2024, 5:13 PM IST

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இன்று பிரச்சாரத்தின் கடைசி நாளாக இருப்பதால், அனைத்து கட்சிகளும் தென்காசி நாடாளுமன்றத் தொகுதி முழுவதும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பாஜக வேட்பாளர் ஜான்பாண்டியன், சங்கரன்கோவில் சங்கரநாராயணன் கோயில் முன்பு இறுதிகட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “திமுக சங்கரன்கோவில் மக்களுக்கு ஏதாவது சேவை செய்திருக்கிறார்களா என யோசித்துப் பாருங்கள். வெற்றி பெற்ற பின்பு இந்த பகுதிக்கு வேட்பாளர் வந்து பார்க்கவில்லை. வெற்றி பெறுவார்கள், படுத்து உறங்குவார்கள், தொகுதி மக்களுக்கு எதுவும் செய்ய மாட்டார்கள், அதுதான் திமுக. ஒன்றரை லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கும் வேட்பாளரை திமுக தேர்தலில் நிறுத்தி இருக்கிறார்கள். இதை முறியடிக்க வேண்டும் என்றால், வாக்காளர் பெருமக்களே உங்கள் பொன்னான வாக்குகளை நிரந்தர பிரதமர் மோடிக்கு அளிக்க வேண்டும்.

திமுக மற்றும் அதிமுக கட்சியில் பிரதமர் யார் என்று சொல்ல முடியுமா? நாங்கள் உறுதிபட சொல்கிறோம், மீண்டும் மோடி தான் மூன்றாவது முறையாக பிரதமராக வருவார். இந்து விரோதியாக திமுக செயல்பட்டு, இந்துக்களே நாட்டில் இருக்கக்கூடாது என்று நினைக்கிறார்கள்.

மக்களே சிந்தித்துப் பாருங்கள், கொள்ளையர்கள் ஆட்சியில் நம்மை எல்லாம் இழிவுபடுத்திவிட்டு பல்லிழித்துக் கொண்டு ஓட்டு கேட்கிறார்களே, கேவலமாக இல்லையா? அவர்கள் பணத்தை மூட்டையில் கட்டிக் கொண்டு, தெருத்தெருவாக ஆளுக்கு 500, 1000 கொடுத்து வியாபாரம் செய்துவிடலாம் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

இப்படித்தான், திமுக எப்போது தேர்தல் வந்தாலும் சரி, பணத்தைக் கொடுத்து வியாபாரம் செய்து நாடாளுமன்றம் சென்று படுத்து உறங்கி வருகிறார்கள். நாளை மறுநாள் தாமரைச் சின்னத்தில் வாக்களியுங்கள்” என்றார்.

அதேபோல், தென்காசி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, கடையநல்லூர் அருகே புளியங்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள், வியாபாரிகளிடம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

மேலும், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட நலத்திட்டங்களை பொதுமக்களிடம் எடுத்துக் கூறி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய கிருஷ்ணசாமி, “திமுக ஆட்சிக்கு வந்து எந்த தேர்தல் வாக்குறுதியையும் முழுமையாக நிறைவேற்றவில்லை.

எனக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைத்தால், தென்காசி மாவட்டத்தில் தொழிற்சாலை கொண்டு வந்து பல்வேறு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவேன் என்று உறுதி அளிக்கிறேன். மேலும், சிலிண்டர் விலையை குறைப்பதற்கும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைப்பதற்கும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுப்பேன்” என கூறினார்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணமுரளி, தேர்தல் பொறுப்பாளர் கண்ணன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும், தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் ராணிஸ்ரீ குமார், கடந்த மார்ச் 31ஆம் தேதி முதல் தென்காசி நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடன் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவு பெறுவதை ஒட்டி, தென்காசியில் திமுக மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர், பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று உதயசூரியனுக்கு வாக்களிக்குமாறு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

பின்னர், தென்காசி திமுக நகர செயலாளர் சாதிர் தலைமையில், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பரப்புரையை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து, அனைவருக்கும் நன்றி தெரிவித்து, நாடாளுமன்றத் தேர்தலுக்கான பரப்புரையை திமுக கூட்டணிக் கட்சியினர் நிறைவு செய்தனர்.

இதையும் படிங்க:"திமுக என்பது கட்ட பஞ்சாயத்துக் கட்சி" - ஜே.பி.நட்டா விமர்சனம்! - LOK SABHA ELECTION 2024

Last Updated : Apr 17, 2024, 5:13 PM IST

ABOUT THE AUTHOR

...view details