தென்காசி:தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் விவசாயம் செய்து வருபவர் கண்ணன். 2020 ஆம் ஆண்டுக்கு முன்பாக துபாயில் வேலை செய்து வந்த கண்ணன், விடுமுறைக்காக தனது சொந்த ஊரான சிவகிரி வந்தபோது கரோனா நோய் தொற்று ஏற்பட்டதால் மீண்டும் துபாய் செல்லாமல் விவசாயம் செய்ய தொடங்கினார்.
நோய் தொற்று முடிவுற்ற பின்பு மீண்டும் துபாய் செல்ல முடிவு செய்தார். அப்போது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதால் அவருக்கு உதவியாக இருந்து கொண்டு விவசாயத்தை விவசாயத்தையும் கவனித்து வந்தார். இவ்வாறாக விவசாயம் செய்யத் தொடங்கிய கண்ணனுக்கு, நாளுக்கு நாள் அதன் மீதான ஆர்வம் அதிகரிக்க தொடங்கியது.
விவசாயி கண்ணன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) 170க்கும் மேற்பட்ட விதைகள்:இதனால் ஒவ்வொரு முறையும் விதைகளை நடவு செய்யும் போது அவைகளைப் பற்றித் தெரிந்து கொண்டு, அதனை சேமித்து வந்துள்ளார். இதே போல் தொடர்ந்து செய்து வர தற்போது 170க்கு மேற்பட்ட விதைகளுடன் இயற்கை விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் செயல்பட்டு வருகிறார் கண்ணன்.
நஞ்சை விதைக்கக் கூடாது:இது குறித்து கண்ணன் கூறுகையில்,"கரோனா காலத்திற்கு அடுத்து இயற்கை விவசாயத்திற்கான விழிப்புணர்வுக்காக, விதைகளை காட்சிப்படுத்தி முகாம் நடத்தி வருகிறேன். எந்த ஒரு விழிப்புணர்வாக இருந்தாலும் அதை குழந்தைகளிடமிருந்து ஆரம்பித்தால் அதை எளிதில் கொண்டு போய் சேர்க்க முடியும் என நம்புகிறேன்.
இதையும் படிங்க:"இப்படித்தான் துணி துவைக்கணுமா?" - மதுரை மாணவர்களிடம் வாழ்க்கைக் கல்வி கற்ற ஆஸ்திரேலிய மாணவர்கள்!
அதனால்தான் தற்போது சிவகிரி சுற்றுவட்டாரப்பகுதியில் இருக்கக் கூடிய 15 பள்ளிக்கூடங்களில் ஏழு பள்ளிகளில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தியுள்ளேன். மற்ற பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறேன். சிவன் சம்பா , காட்டுயானம், இலும்பை பூ சம்பா, குடல் வாழை, மிளகு சம்பா, ரத்தசாலி உள்ளிட்ட நெல்வகைகள் மற்றும் குப்பைக் கீரை, பொன்னாங்கண்ணி, துத்தி கீரை, பல கிளை வெண்டக்கா உள்ளிட்ட 170க்கும் மேற்பட்ட விதைகளைச் சேமித்து வைத்துள்ளோன்.
மேலும் அதனை விளைவிப்பது எப்படி? அவற்றல் நம் உடலுக்கு என்ன பயன் என்பது குறித்து குறிப்பு எடுத்து வைத்துள்ளேன். எனது குழந்தைகள் மட்டும் அல்லாது அடுத்த தலைமுறையினருக்கு 'நஞ்சு இல்லாத உணவைக் கொடுக்க வேண்டும்' என்ற நோக்கில் இது போன்று செய்து வருகிறேன்" என தெரிவித்தார்.
இயற்கை விவசாயம் கற்கும் மாணவிகள்:கண்ணன் இயற்கை விவசாயம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவது குறித்து அறிந்த தனியார் வேளான் கல்லூரி மாணவிகள், நேரடியாக அவரின் வீட்டிற்கு வருகை புரிந்து விதைகள் குறித்து கேட்டறிந்தனர். வெளிநாட்டில் வேலை செய்து வந்தாலும் விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று கண்ணன் மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்குப் பலரும் தங்களது பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணையஇங்கே க்ளிக் செய்யவும்