தென்காசி:நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. அந்தவகையில், தென்காசி மாவட்டத்தில் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக செயல்பட்டு வருகின்றனர்.
தற்போது, தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், வெற்றி வாய்ப்புகளை நோக்கி அனைவரின் செயல்பாடுகளும் உள்ளது. முன்னதாக, தென்காசி எம்பியாக தனுஷ் எம் குமார் செயல்பட்டு வந்த நிலையில், திமுக சார்பில் நாடாளுமன்றத் தேர்தலில், மீண்டும் தனுஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீர் திருப்பமாக சங்கரன்கோவிலைச் சேர்ந்த மயக்க மருந்து நிபுணர் டாக்டர் ராணி ஸ்ரீ குமாருக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. திமுக சார்பாக புது முகத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், தென்காசி வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கு தென்காசி தெற்கு மாவட்டம் சார்பில் கடையநல்லூர், மணிக்கூண்டு அருகே வெகு சிறப்பாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும், தென்காசி தெற்கு மாவட்ட ஜெயபாலன் தலைமையில், நூற்றுக்கணக்காக திமுக மற்றும் கூட்டணிக் கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு மாலை அணிவித்து, பூக்கள் தூவி வரவேற்றனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தென்காசி நாடாளுமன்ற வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார், "அந்தந்த மாவட்டங்களுக்கு என்ன தேவையோ அதனைச் செய்வதாக திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனையும் தாண்டி பிரச்சாரத்திற்குச் செல்லும் போது, மக்களின் தேவைகளை அறிந்து அதை நிறைவேற்றப் பாடுபடுவேன். என்னுடைய தொகுதி மக்களின் குரலாகவும், விவசாயிகளின் குரலாகவும் நாடாளுமன்றத்தில் ஒழிப்பேன்.
மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகளிருக்கும், மாணவர்களுக்கும் அதிகளவில் நலத்திட்ட உதவிகளைச் செய்துள்ளார். அதனைக்கூறி, வாக்குக் கேட்போம். ஆகையால் வெற்றி வாய்ப்பு பிரகாரமாக உள்ளது. மகளிர் ஓட்டும், இளம் வாக்காளர்கள் ஓட்டும் திமுகவிற்குக் கிடைக்கும் என நம்புகிறோம். தென்காசி நாடாளுமன்றத் தேர்தலில், சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே, திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமாருக்கு சங்கரன்கோவில், கடையநல்லூர், தென்காசி, புளியங்குடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கட்சியின் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, தென்காசியில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து மற்றும் புது முகத்தை அறிமுகப்படுத்தியுள்ளதால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: சூடுபிடிக்கும் தேர்தல் களம்.. திமுக - அதிமுக - பாமக 6 இடங்களில் நேரடி போட்டி! - DMK Vs AIADMK Vs PMK