தென்காசி:18வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்து. இதில் தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில், திமுக சார்பில் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றிய ராணி ஸ்ரீ குமார் வேட்பாளராக களம் இறங்கினார்.
மேலும், அதிமுக கூட்டணிக் கட்சி சார்பில் வேட்பாளராக புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் கிருஷ்ணசாமி, பாரதிய ஜனதா கட்சி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான் பாண்டியன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் இசை மதிவாணன் ஆகியோர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், இத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று (ஜூன் 4) நடைபெற்று, அதற்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டன. அந்த வகையில், தென்காசி தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை USB கல்லூரியில் வைத்து நடைபெற்றது. இந்த வாக்கு எண்ணிக்கையில் முதல் சுற்றில் இருந்து திமுக முன்னிலையை தக்கவைத்தது.
மேலும், இரண்டாவது இடத்தை அதிமுக மற்றும் மூன்றாவது இடத்தை பாஜகவும் தக்கவைத்தன. மொத்தம் பதிவான வாக்குகள் சட்டமன்றத் தொகுதி வாரியாக 27 சுற்றுகளாக எண்ணப்பட்ட நிலையில், திமுகவைச் சேர்ந்த வேட்பாளர் ராணி ஸ்ரீ குமார் பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் எதிர்த்து போட்டியிட்டவர்களை தோற்கடித்தார்.