தென்காசி:கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் நல்ல மழை பெய்ததை தொடர்ந்து, குற்றாலம் உள்ளிட்ட பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. இதனிடையே கடந்த 17ஆம் தேதி அன்று திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மேலும், 17 வயது சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் மாநில அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அருவியில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள் (Video Credits - ETV Bharat Tamil Nadu) சிறுவன் உயிரிழப்பு சம்பவத்தை அடுத்து அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. சில நாட்களாக அருவிகளில் மிதமான அளவில் தண்ணீர் கொட்டியது. இருப்பினும், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இதனைத் தொடர்ந்து அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு காலத்தில் சுற்றுலா பயணிகளை பாதுகாக்கும் வகையில் முன்னேற்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதில் பழைய குற்றால அருவியில், வெள்ளத்தின்போது சுற்றுலா பயணிகள் அடித்து செல்லாதவாறு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு பல்வேறு பாதுகாப்பு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு பிறகு பழைய குற்றாலம், ஐந்தருவி, புலி அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் குளிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பழைய குற்றாலம் அருவியில், ஒரு வாரத்திற்கு பின்னர் இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டதையடுத்து, பழைய குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல் போட்டு வந்தனர்.
மீண்டும் தடை: இந்த நிலையில், பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவி உள்பட குற்றாலத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போது மழை பெய்து வருகிறது. இதன் விளைவாக ஐந்தருவி மற்றும் பழைய குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க காலையில் அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் மதியம் மீண்டும் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஐந்தருவி மற்றும் பழைய குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரிப்பால் பொதுமக்கள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மெயின் அருவியின் கரை பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருவதால், அங்கு சுற்றலா பயணிகளுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடை நீடிக்கிறது. மொத்தத்தில் ஒரு வார காலத்துக்கு பின்பு, குற்றால அருவிகளில் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கிக் கொள்ளப்பட்ட சில மணி நேரங்களிலேயே மீண்டும் தடை விதிக்கப்பட்டிருப்பதால், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க:குற்றாலத்தில் குளிக்க அனுமதி.. ஆனா ஒரு சின்ன ட்விஸ்ட்! - Old Courtallam Falls Bath Timing