நூறு நாள் வேலை திட்டத்தின் ஊதிய உயர்வு தேர்தல் விதிமுறைக்கு புறம்பானது தென்காசி:நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி மற்றும் நாம் தமிழர் கட்சி என நான்கு முனைப் போட்டி உள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்த நிலையில், இதுவரை தமிழ்நாட்டில் போட்டியிட 1,749 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். அதனைத் தொடர்ந்து, இன்று தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்று முடிவுற்றுள்ளது.
தென்காசி நாடாளுமன்றத் தொகுதியில், அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி போட்டியிடுகிறது. இந்நிலையில், தென்காசி நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமி தென்காசி, மேலகரம் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
இதில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 100 நாள் வேலை திட்டத்திற்கான ஊதிய உயர்வை அதிகரிக்க வேண்டும் என்று கூறியது குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், “மத்திய அரசு நூறு நாள் வேலை திட்டத்திற்கான ஊதிய உயர்வை அறிவித்திருப்பது தேர்தல் விதிமுறைகளுக்கு புறம்பானது. ஊதிய உயர்வுக்கான அரசாணையை முன்னதாகவே போடப்பட்டிருப்பதால் இந்த அறிவிப்பை அளித்ததாக கூறுகின்றனர். அரசாணை வெளியிட்டிருந்தால் அதனை உடனடியாக செயல்படுத்தி இருக்க வேண்டும்.
தேர்தல் தேதி அறிவித்து, வேட்பாளர்கள் மனுத்தாக்கல் செய்து முடித்துள்ள நிலையில், எந்த பதிய அறிவிப்புகளும் வரக்கூடாது. தேர்தல் விதிமுறைகளுக்கு மாறான நடவடிக்கை. சாதாரண மக்களுக்கு சம்பள உயர்வு என்பது மகிழ்ச்சி. ஆனால், இதை ஏன் ஒரு மாதத்திற்கு முன்னதாக செயல்படுத்தவில்லை?
கடந்த ஒரு மாத காலமாக பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு அடிக்கடி வருகை தந்தார். அப்போது இந்த திட்டத்தை அறிவித்திருக்கலாம். ஆனால், அப்போது அறிவிக்காமல் தற்போது தேர்தலுக்கு சில நாட்கள் இருக்கும் நிலையில் அறிவித்திருப்பது மக்களிடம் முறைகேடான முறையில் வாக்கு சேகரிப்பதற்கு. இதற்கு தேர்தல் ஆணையம் எப்படி அனுமதி அளித்தது?” என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க:இந்து நாடாரா? கிறிஸ்தவ நாடாரா? நெல்லை காங்கிரசில் போட்டி வேட்பாளர் சொல்வது என்ன? - Former Congress MP Ramasubbu