சென்னை:குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு இன்று காலை வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் தனியார் பயணிகள் விமானம், 184 பயணிகளுடன், அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டது. அந்த விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்த போது, விமானத்தில் திடீரென தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த விமானம் மீண்டும் அகமதாபாத் விமான நிலையத்திலேயே அவசரமாக தரையிறங்கியது.
விமானத்தில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப கோளாறை உடனடியாக சரி செய்ய முடியாததால், அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய அந்த விமானம் ரத்து செய்யப்பட்டது. இந்த தனியார் பயணிகள் விமானம், அகமதாபாத்தில் இருந்து சென்னைக்கு வந்துவிட்டு, மீண்டும் சென்னையில் இருந்து காலை 8.45 மணிக்கு, தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்-திற்கு புறப்பட்டு செல்ல வேண்டும்.
ஆனால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக, அகமதாபாத்தில் இருந்து சென்னை வரவேண்டிய விமானம் ரத்து செய்யப்பட்டதால், சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்ல வேண்டிய அந்த தனியார் பயணிகள் விமானம் ரத்து செய்யப்பட்டது. அதோடு இன்று மாலை 6.15 மணிக்கு, ஹைதராபாத்தில் இருந்து, சென்னைக்கு வந்து சேர வேண்டிய தனியார் பயணிகள் விமானம், மீண்டும் சென்னையில் இருந்து அகமதாபாத்திற்கு இன்று இரவு 9.05 மணிக்கு, செல்ல வேண்டிய அந்த தனியார் பயணிகள் விமானம் ஆகியவைகளும் ரத்து செய்யப்பட்டன.
தனியார் பயணிகள் விமானம் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்னை விமான நிலையத்தில் இன்று, 2 வருகை விமானங்கள், 2 புறப்பாடு விமானங்கள் மொத்தம் 4 விமானங்கள் ரத்தாகி, அகமதாபாத், ஹைதராபாத் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இந்த நிலையில், இந்த விமானங்களில் பயணிக்க இருந்த பயணிகளுக்கு, விமான டிக்கெட் கட்டணங்கள் முழுமையாக திருப்பிக் கொடுப்படும் அல்லது பயணிகள் விருப்பப்பட்ட வேறு தேதிகளில், பயணம் செய்யும்படி, டிக்கெட்கள் மாற்றி கொடுக்கப்படும் என சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க:கோவை தொகுதி தேர்தல் முடிவுகளை தள்ளி வைக்க கோரிய வழக்கு முடித்து வைப்பு.. முழு விவரம்! - Coimbatore Lok Sabha Election Case