சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4 ஆயிரம் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு, ஆகஸ்ட் 4ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்றும், அதற்காக வரும் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், "தமிழ்நாட்டில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு வரும் 28-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி மாலை 5 மணி வரை, www.trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், இந்த அறிவிப்பின் மூலம் 3 ஆயிரத்து 921 நடப்பு காலிப் பணியிடங்கள் மற்றும் 79 பின்னடைவு காலி பணியிடங்கள் என மொத்தம் 4 ஆயிரம் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
விண்ணப்பம் செய்ய தகுதியுடையவர்கள்:
- தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு முறைப்படி காலிப் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
- ஜூலை 1, 2024ல் 57 வயது முடியாதவர்கள் உதவிப் பேராசிரியர் பணிக்கு விண்ணப்பம் செய்யலாம்.
- பல்கலைக்கழக மானிய குழுவின் விதிமுறையின் படியும், உயர் கல்வித் துறையின் அரசாணையின் அடிப்படையில், நெட் (NET-National Eligibility Test) அல்லது செட் (SET- State Eligibility Test) தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- தமிழ் மொழியை பாடமாக எடுத்து படிக்காமல், பிற மொழி எடுத்து படித்தவர்கள் தமிழ் மொழி தேர்வில் பணி நியமனம் செய்யப்பட்ட இரண்டு ஆண்டுக்குள் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
- உயர் கல்வித்துறை ஏற்கனவே அறிவித்தது போன்று, கௌரவ விரிவுரையாளர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட உள்ளதால், அவர்கள் பணி அனுபவச் சான்றுகளை கட்டாயம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
கலை பாட பிரிவுகள், வணிகவியல், மானுடவியல், கல்வியியல், சமூக அறிவியல், அறிவியல், உடற்கல்வி, இயல், இதழியல் மற்றும் தொடர்பியல் ஆகிய பாடப்பிரிவுகளில் உதவி பேராசிரியர் பணி நியமனம் செய்யப்படுபவார்கள்.