சென்னை:தமிழ்நாட்டில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, 12ஆம் வகுப்பிற்கு மார்ச் 1ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பிற்கு மார்ச் 4ஆம் தேதி முதல் 25ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பிற்கு மார்ச் 26ஆம் தேதி முதல் ஏப்ரல் 8ஆம் தேதி வரையிலும் நடைபெறுகிறது.
12ஆம் வகுப்பிற்கு நாளை (பிப்.12) முதல் 17ஆம் தேதி வரையிலும், 11ஆம் வகுப்பிற்கு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையிலும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் செய்முறை த்தேர்வு பிப்ரவரி 23ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்த நிலையில், தேர்வுகளைக் கண்காணிக்க நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கான பணிகளையும் வரையறை செய்து அரசுத் தேர்வுத்துறை வழங்கி உள்ளது. இதன்படி, தேர்வுகள் நடைபெறும்போது வெளியில் இருந்து அதிரடியாக கண்காணிக்கும் பணியில் பறக்கும் படையில் நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள் செய்ய வேண்டியவை குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், “மாணவிகளை சோதனையிட ஆசிரியைகள் நியமனம் பறக்கும் படையில் நல்ல அனுபவமும், மிக்க நேர்மையும் வாய்ந்த துடிப்பான (குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகள் அனுபவம் உள்ள) ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். பெண் தேர்வர்களைச் சோதனையிட பெண் ஆசிரியர்களையும் பறக்கும்படை உறுப்பினர்களாக நியமித்தல் வேண்டும். பறக்கும் படையில் உறுப்பினர்களாக நியமனம் செய்யப்படும் ஆசிரியர்கள், மிக நேர்மையுடன் உண்மையான முறையில் செயல்படுபவர்களாக இருத்தல் வேண்டும்.
எவரிடத்திலும் அச்சமின்றியும், அதே நேரத்தில் தமக்கு அளிக்கப்பட்ட பொறுப்பினை எல்லை மீறாமல் செயல்படுபவர்களாகவும் இருத்தல் மிகவும் அவசியம். அடிக்கடி புகார்களுக்கு இடமளிக்கக்கூடிய தேர்வு மையங்களை பறக்கும்படை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். அனைத்து தேர்வு மையங்களுக்கும் 10 அறைகளுக்கு ஒருவர் என்ற விகிதத்தில் நிலையான படை அமைத்து, தீவிரமாகக் கண்காணிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தேர்வு மையத்தில் ஒழுங்கீனச் செயலில் ஈடுபட்டு, பறக்கும் படையினரால் கண்டுபிடிக்கப்பட்ட நிகழ்வுகள் குறித்து, செய்தித்தாள்கள் மூலம் வெளியிடப்பட்டால், ஒழுங்கீனச் செயல்கள் நடைபெறுதல் பெருமளவு குறைக்கப்பட வாய்ப்பு உள்ளதால், அது குறித்து ஆய்வு அலுவலர்களிடம் தெரிவித்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.