சென்னை: தமிழகத்தில் மதுபானத்தை ஆன்லைன் டெலிவரி நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாகவும், இதுகுறித்து ஆன்லைன் விநியோக நிறுவனங்கள், மது உற்பத்தியாளர்கள் போன்றோருடன் அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானது.
இது குறித்து கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலம் வீடுகளுக்கேச் சென்று மதுவை விற்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று தெரிவித்தார். வீடுகளுக்கே மதுவை விநியோகித்தால் அதனால் ஏற்படும் விளைவுகளை நினைத்துக்கூட பார்க்க முடியாது.
தமிழ்நாட்டில் படிப்படியாக மதுவிலக்கை ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதி அளித்த முதலமச்சர் மு.க.ஸ்டாலின், மது பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய திட்டங்களை அனுமதிக்கக் கூடாது. மது வகைகளை ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்பனை செய்யும் திட்டம் இருந்தால் அதை தமிழக அரசு கைவிட வேண்டும் என கூறியிருந்தார். இல்லையெனில், மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை பாமக நடத்தும் என்று தமிழக அரசுக்கு ராமதாஸ் எச்சரிக்கை விடுத்திருந்தார்.