திருப்பத்தூர்:திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஏலகிரி மலையில் உள்ள தனியார் விடுதியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் கலந்துகொண்டார்.
மேலும் இக்கூட்டத்தில் 36 தீர்மானங்கள் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் அதிமுக, திமுக எந்த ஆட்சி நடைபெற்றாலும் கள்ளச்சாராயம் மரணங்கள் என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதுபோன்ற மரணங்கள் நடைபெறுகிறது என்றால் காவல்துறை, வருவாய்த் துறை மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர், தலைவர், துணைத் தலைவர், எம்எல்ஏ, எம்பி, அமைச்சர் உள்ளிட்டோர் அனைவருமே அரசுக்குப் பதில் சொல்ல வேண்டும்.
தமிழக முதலமைச்சர் சட்டத் திருத்தம் கொண்டு வந்து கடுமையான நடவடிக்கை மேற்கொண்டால் மட்டுமே இதற்குத் தீர்வு காண முடியும். மேலும், வருவாய்த் துறை, மாவட்ட ஆட்சியர் கீழ் இயங்கக்கூடிய ஏனைய துறைகளும் இதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும். சமூக நீதியின் பிறப்பிடம் தமிழகம் என்று திராவிட இயக்கங்கள் சொல்லி வருகிறார்கள்.
ஆனால் இன்றைக்கு தமிழ்நாட்டில் சமூக நீதி கிடைக்காத ஒரு சூழல் இருக்கிறது. அதற்குக் காரணம் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆதலால் உண்மையான சமூக நீதி அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டுமென்றால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, அந்தந்த சாதியில் உள்ள எண்ணிக்கைக்கு ஏற்றவாறு கல்வி, வேலை வாய்ப்பு, வழங்கப்பட்டால் தான் உண்மையான சமூகநீதி ஆகும்.