சென்னை:கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் இருந்து கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் கொண்ட பக்தர்கள் குழு, உத்தரகாண்ட் மாநிலத்தின் ஆதி கைலாஷ் பகுதிக்கு ரயிலில் யாத்திரை சென்றனர். ஆதி கைலாஷ் பகுதிக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டுத் திரும்பும்போது, தாவகட் என்ற பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதில் சாலைகள் துண்டிக்கப்பட்டு அங்கிருந்து தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அனைவரும் சிக்கித் தவித்தனர். இதுகுறித்து தகவலறிந்த தமிழ்நாடு அரசு, உத்தரகாண்ட் அரசுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு ஹெலிகாப்டர் மூலம் அவர்களை மீட்டு, டார்ஜூலா பகுதிக்கு அழைத்து வந்தது.
இதன் பின்பு அனைவருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு, அரசு செலவில் 30 பேரும் ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்பட இருந்தனர். அவர்களில் 17 பேர் நேற்றைய முன்தினம் விமானம் மூலம் சென்னை வந்து, கடலூர் மாவட்டத்தில் அவர்களது சொந்த ஊர்களுக்குச் சென்றுவிட்டனர்.
இதையும் படிங்க:உணவுக்காக 200 யானைகளைக் கொல்ல திட்டம்.. கடும் வறட்சியில் தவிக்கும் ஜிம்பாப்வே!
மீதமுள்ள 13 பேர் நேற்று எழும்பூர் ரயில் நிலையத்திற்கு வந்தனர். அவர்களை அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வி.கணேசன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து ரோஜா மலர் கொடுத்து வரவேற்றனர்.
பின்னர், அமைச்சர் செஞ்சி மஸ்தான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது, "தமிழகத்திலிருந்து உத்தரகாண்ட் சென்ற 30 பேர் மண்சரிவு காரணமாக சிக்கிக் கொண்டனர். இது குறித்த செய்தி தமிழ்நாடு முதலமைச்சருக்கு வந்தவுடன், உடனடியாக அங்கிருந்த மக்களை தொடர்பு கொண்டு, எந் வித அச்சமும் படாமல் தைரியமாக இருங்கள் என கூறினார்.
மேலும், அரசு சார்பில் அவர்களுக்குத் தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டது. தொடர்ந்து, புதன்கிழமை 13 பேர் ரயில் மூலம் தமிழகத்துக்கு வந்துள்ளனர். எனது துறை சார்பாக அவர்களது சொந்த ஊர்களுக்குச் செல்ல வாகன ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
மேலும், உத்தரகாண்ட் நிலச்சரிவு பகுதியில் இருந்து மீட்கப்பட்ட அனைவரையும் பார்த்தும் நலம் விசாரித்தோம். 'நல்லபடியாக நாங்கள் வந்து சேர்ந்து இருக்கிறோம். தமிழ்நாடு அரசிற்கும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் எங்களது நன்றி" எனத் தெரிவித்தனர் என்றார்.