சென்னை:தமிழகத்தில் உள்ள ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் இயல்பை விட 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருந்தது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள 9 இடங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக ஈரோட்டில் 42 டிகிரி, வேலூரில் 41.6 டிகிரி, திருப்பத்தூரில் 41.4 டிகிரி, சேலத்தில் 41.1 டிகிரி, கரூர் பரமத்தியில் 41 டிகிரி, தர்மபுரியில் 40.7 டிகிரி, திருத்தணியில் 40.6 டிகிரி, நாமக்கல் மற்றும் திருச்சியில் 40.5 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
மேலும் தமிழக கடலோரப்பகுதிகள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் 34 டிகிரி முதல் 37 டிகிரி செல்சியஸ் மற்றும்மலைப் பகுதிகளில் 21 டிகிரி முதல் 30 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. சென்னை மீனம்பாக்கத்தில் 38.7 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 35.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 28 வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்கள், தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.