தேனி:ஆன்லைன் வர்த்தகத்தில் இருந்து வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் சிறப்பு பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் 42-வது மாநில மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு, வணிகர்களின் ஆலோசனை கூட்டம் தேனியில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (பிப்ரவரி 06) நடைபெற்றது. இதில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்ரமராஜா கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோரிடம் கலந்துரையாடினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து விக்ரமராஜா பேசியதாவது, “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 42 வது மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் இன்று தேனியில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் 7 ஆயிரம் வணிகர்கள் பங்கேற்பது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வணிகர்களின் பிரச்சினைகள் மற்றும் வாடகை கட்டடங்களுக்கு வரி, தொழில் வரி உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டிற்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் ஆகியோருக்கு அழைப்பு விடுக்க உள்ளோம்.