சேலம்:மாங்கனிக்கு பெயர் போன மாவட்டமாக சேலம் திகழ்கிறது. குறிப்பாக மல்கோவா மாம்பழம் சேலத்தின் தனித்த அடையாளங்களில் ஒன்றாக விளங்குகிறது.
சேலம் நாடாளுமன்ற தொகுதியானது ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு, வீரபாண்டி ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் மூன்று தொகுதிகள் மாநகர பகுதியிலும், மீதமுள்ள 3 தொகுதிகள் புறநகர் பகுதியிலும் அமைந்துள்ளன.
இதுவரை வெற்றி பெற்ற கட்சிகள்: கடந்த 1952 ஆம் ஆண்டு தேர்தல் முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான லோக்சபா தேர்தல்களில் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் தனித்தும், கூட்டணி வைத்தும் 7 முறை வெற்றி பெற்ற தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது. திமுக 3 முறையும், அதிமுக 4 முறையும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஒரு முறையும், தமிழக ராஜீவ் காங்கிரஸின் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி சுயேச்சையாகவும் வெற்றி பெற்றுள்ளனர்.
மூன்று முதல்வரை வழங்கிய கொங்கு மண்டலம்:சேலம் மாவட்டத்தில் இருந்த திருச்செங்கோட்டை சேர்ந்த ப.சுப்பராயன் 1927ஆம் ஆண்டு சென்னை ராஜதானி முதல்வராக பொறுப்பு வகித்த முதல் தமிழர் என்ற பெருமையைக் கொண்டவர்.
மேலும், கிருஷ்ணகிரி, ஓசூர் தொரப்பள்ளியைச் சேர்ந்த சி.ராஜகோபாலாச்சாரி சென்னை மாகாண முதல்வராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர், எடப்பாடியைச் சேர்ந்த கே.பழனிசாமி கடந்த 2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை தமிழக முதலமைச்சராக பொறுப்பு வகித்தார்.
2024 தேர்தலில் களத்தில் உள்ள வேட்பாளர்கள்:இந்த தேர்தலில், அதிமுக வேட்பாளராக புதிய முகம் விக்னேஷ்,
திமுக வேட்பாளராக டி.எம்.செல்வ கணபதி, பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் அண்ணாதுரை, நாம் தமிழர் கட்சி சார்பில் மனோஜ்குமார் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதில், பாமகவுக்கு கணிசமான வாக்கு வங்கி உள்ள மாவட்டமாக சேலம் உள்ளது. பாமக வேட்பாளர் அண்ணாதுரை கணிசமான வாக்குகளை பிரிப்பார். அதன் மூலம் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப்படும் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் மொத்தம் 16,58,681 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 8,28,152 பெண் வாக்காளர்கள் 8,30,307 மூன்றாம் பாலின வாக்காளர்கள் 222 பேர் அடங்குவர். இவர்களில் மொத்தம் 12,96,481 பேர் வாக்களித்துள்ளனர். மொத்த வாக்குப்பதிவு 78.16 சதவீதம்
2019 தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்:கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது மொத்த வாக்காளர்கள் 16,11,982 உள்ள நிலையில், ஆண் வாக்காளர்கள் 8,09,760, பெண் வாக்காளர்கள் 8,02,132, மூன்றாம் பாலினத்தவர்கள் 90 வாக்காளர்கள் இருந்தனர்.
இவர்களில் 12,55,459 வாக்குகள் (80.5%) பதிவாகின. திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.பார்த்திபன் 6,06,302 வாக்குகள் பெற்று முதலிடத்தில் வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட கே.ஆர்.எஸ்.சரவணன் 4,59,376 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் களமிறங்கிய பிரபு மணிகண்டன் 58,662 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தையும், சுயேச்சையாக போட்டியிட்ட எஸ்.கே.செல்வம் 52,332 வாக்குகள் பெற்று நான்காவது இடத்தையும் பெற்றனர்.
அரசியல் அனுபவம்:திமுக சார்பில் வேட்பாளராக களம் இறங்கியுள்ள டி.எம்.செல்வ கணபதி, அதிமுகவில் இருந்த காலத்தில் தவிர்க்க முடியாத சக்தியாகவும், அமைச்சராகவும் அரசியல் களத்தில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அவர் திமுகவிற்கு வந்த பிறகு, ஊழல் வழக்கில் சிக்கி தேர்தலில் பங்கேற்க முடியாமல் பல ஆண்டுகளாக தவித்து வந்தார்.
இந்நிலையில், தற்போது ஊழல் வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டதையடுத்து இந்த தேர்தலில் களமிறங்கியுள்ளார். அவருக்கென இருக்கும் தனி செல்வாக்கும், திமுகவிற்கு இருக்கும் வாக்கு வங்கியும் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கியும் இவருக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
புதுமுகம்: அரசியலுக்கு புதுமுகமான விக்னேஷ் என்ற இளைஞர் அதிமுக வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்திற்கு உள்ள அசைக்க முடியாத வாக்கு வங்கியை மட்டுமே நம்பி அவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி களமிறக்கி உள்ளார் என்பது வெளிப்படையாக தெரிகிறது.
சவால் தரும் வேட்பாளர்: பாரதிய ஜனதா கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் அண்ணாதுரை சேலத்தில் வேட்பாளராக களம் இறங்கி இரண்டு பெரிய கட்சிகளுக்கும் சவாலை ஏற்படுத்தியுள்ளார் என்று கூறலாம். தமக்கு இருக்கும் அரசியல் அனுபவமும் பாட்டாளி மக்கள் கட்சிக்கென இருக்கும் வாக்கு வங்கியும் தனக்கு வெற்றியைத் தரும் என்று அவரும், அவரது ஆதரவாளர்களும் நம்புகின்றனர்.
வேட்பாளரான மருத்துவர்: நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான மருத்துவர் மனோஜ் குமார் புதியதாக அரசியலில் இறங்கி உள்ளார். மருத்துவத் துறையில் அவரது சேவை, மக்களுக்கு பல்வேறு பலன்களை அளித்த காரணத்தினால், அவை அனைத்தும் தனக்கு வாக்குகளாக மாறும் என்று நம்பி களம் இறங்கி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாமகவுக்கு வாங்கி வங்கி உள்ள தொகுதி தான் என்றாலும், திமுக, அதிமுகவிற்கு இடையே தான் நேரடி போட்டி என்பது இந்த தேர்தலிலும் சேலத்தில் உறுதியாகி உள்ளது. இதில் வெல்லப் போவது யார் என்பது வரும் ஜூன் 4ஆம் தேதி தெரியும்.
இதையும் படிங்க:மக்களவைத் தேர்தல் 2024: அரக்கோணம் தொகுதியை தக்க வைக்குமா திமுக? - களம் சொல்வது என்ன?