தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் 2024: மயிலாடுதுறை தொகுதியில் மசூடம் சூடப் போவது யார்? களநிலவரம் என்ன? - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election Results 2024 Live Updates: பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்படுகின்றன. இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 மக்களவைத் தொகுதிகளில், ஒவ்வொரு தொகுதியிலும் வேட்பாளர்களின் முன்னிலை நிலவரம் குறித்த தகவல்களை நொடிக்கு நொடி களத்திலிருந்து நேரடியாக வழங்கிக் கொண்டிருக்கிறது ஈடிவி பாரத்.

மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர்கள்
மயிலாடுதுறை தொகுதி வேட்பாளர்கள் (Credit - ETVBharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 2:04 PM IST

Updated : Jun 3, 2024, 9:54 PM IST

மயிலாடுதுறை:காவிரி நதிப் பாயும் டெல்டா மாவட்டம் என்ற சிறப்பை பெற்றுள்ள மயிலாடுதுறை மாவட்டம், 1950 களில் மாயூரம் என்று அழைக்கப்பட்டது. தற்போதைய மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி சீர்காழி, மயிலாடுதுறை, பூம்புகார் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், பாபநாசம் என ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியுள்ளது.

மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி மக்களின் பிரதான தொழிலாக விளங்குவது விவசாயம். அடுத்த இடத்தை பிடிப்பது மீன்பிடித் தொழில். மேலும், பித்தளை பாத்திரங்கள் தயாரிப்பு, திருபுவனம் பட்டு நெசவு போன்ற தொழில்களிலும் இம்மாவட்டத்தின் பிற முக்கிய தொழில்களாக உள்ளன.

அதிக முறை வென்ற கட்சி எது?: இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி 11 முறையும், திமுக 3 முறையும், அதிமுக 2 முறையும் இதுவரை வெற்றி பெற்றுள்ளன.1967, 1971 ஆகிய தேர்தல்களில் திமுகவை சேர்ந்த சுப்ரவேலு எம்.பியாக இருந்தார். ஆனால், கடந்த 1984, 1989, 1991 ஆகிய மூன்று மக்களவைத் தேர்தல்களில் மயிலாடுதுறையில் போட்டியிட்ட திமுக தோல்வியை அடைந்தது.

அதன்பின்பு தொடர்ந்து கூட்டணி கட்சிகளுக்கே இந்த தொகுதியை திமுக ஒதுக்கிவந்த நிலையில் 2019 மக்களவைத் தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிட்டது. 28 ஆண்டுகளுக்கு பிறகு 2019 தேர்தலில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட ராமலிங்கம் 2,61,314 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதற்கு முன்னர் இரண்டு முறையாக தொடர்ந்து அதிமுக வசம் இருந்த இந்த தொகுதியை கடந்த தேர்தலில் திமுக கைப்பற்றியது.

முந்தைய தேர்தல்களில், காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிப் பெற்ற மரகதம் சந்திரசேகர், மணிசங்கர் ஐயர் ஆகியோர் தேசிய அரசியல் கவனம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

2019 தேர்தல் முடிவு என்ன?:2019 நாடாளுமன்ற தேர்தலில், மயிலாடுதுறை தொகுதியில் மொத்தம் 27 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்களில் திமுக வேட்பாளர் செ.ராமலிங்கம் 5 லட்சத்து 99 ஆயிரத்து 292 வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் எஸ்.ஆசைமணியை 2 லட்சத்து 61 ஆயிரத்து 314 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அமமுக வேட்பாளர் எஸ்.செந்தமிழன் 69 ஆயிரத்து 030 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுபாஷினி 41 ஆயிரத்து 056 வாக்குகளையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ரிபாயுதீன் 17 ஆயிரத்து 005 வாக்குகளையும் பெற்றனர். 27 பேர் போட்டியிட்டதில் அதிமுக வேட்பாளர் ஆசைமணியை தவிர்த்து மற்ற 25 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திமுக வெற்றிக்கான காரணம்?:தமிழகத்தில் அப்போது ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகவில் நிலவிவந்த உட்கட்சி பூசல் காரணமாக, அக்கட்சி மீது பொதுமக்கள் மத்தியில் பரவலாக அதிருப்தி இருந்தது. அத்துடன், பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைத்து போட்டியிட்டது திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக அமைந்தன.

அப்போது இத்தொகுதியில் இருந்த 14 லட்சத்து 84 ஆயிரத்து 346 மொத்த வாக்குகளில், 10 லட்சத்து 97 ஆயிரத்து 780 வாக்குகள் பதிவாகின. இவற்றில் 8,231 வாக்குகள் நோட்டாவுக்கு விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

2024 தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்:மயிலாடுதுறை மக்களவைத் தொகுதியில் தற்போது 7 லட்சத்து 56 ஆயிரத்து 846 ஆண் வாக்காளர்கள், 7 லட்சத்து 81 ஆயிரத்து 436 பெண் வாக்காளர்கள், 69 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 15 லட்சத்து 38 ஆயிரத்து 315 வாக்காளர்கள் உள்ளனர். (மயிலாடுதுறை மக்களவை தொகுதியில் ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம்). இவர்களில், ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் மொத்தம் 10 லட்சத்து 83 ஆயிரத்து 143 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்தி உள்ளனர். மொத்த வாக்குப்பதிவு 70.06 சதவீதமாகும்.

களம் கண்டுள்ள வேட்பாளர்கள்: 2024 மக்களவைத் தேர்தலில் இத்தொகுதியில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா, பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளராக ம.க.ஸ்டாலின், அதிமுக சார்பில் பாபு, நாம் தமிழர் கட்சியின் சார்பில் காளியம்மாள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் என 17 பேர் களத்தில் உள்ளனர்.

வேட்பாளர்கள் தாங்கள் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களை கவரும் வகையில் டீக்கடை, பூக்கடை மற்றும் காய்கறி மார்க்கெட்களில் வியபாரம் செய்தும், வயலில் விவசாய பணிகளை மேற்கொண்டும், துணியை நெசவு செய்தும் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

வெற்றி யாருக்கு?: 2019 தேர்தலில் திமுக vs அதிமுக என மாநிலத்தின் இருபெரும் கட்சிகளுக்கு இடையே இருமுனைப் போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது இங்கு திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் போட்டியிட்டுள்ளது. வேட்பு மனு தாக்கல் நிறைவடைவதற்கு சில நாட்களுக்கு முன்புதான் இத்தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக சுதா அறிவிக்கப்பட்டார். இத்தகைய சூழலில், மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் மசூடம் சூடுமா? அதிமுக வெற்றிப் பெறுமா? என்ற கேள்விகளுக்கான விடை ஜுன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: தேர்தல் 2024: விடாமுயற்சியில் ஏசிஎஸ்... வேலூரில் வெல்லப் போவது யார்? - Vellore Lok Sabha Election Result

Last Updated : Jun 3, 2024, 9:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details