தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தேர்தல் 2024: கோயில் நகரமாம் காஞ்சிபுரத்தில் வெற்றிக்கொடி நாட்டப் போவது யார்? - LOK SABHA ELECTION 2024 - LOK SABHA ELECTION 2024

kancheepuram constituency result 2024: காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி, குறிப்பிட்ட எந்தவொரு கட்சிக்கும் சாதகமாக இருந்ததில்லை என்ற வரலாறு இருந்துவரும் நிலையில், இம்முறை இத்தொகுதியில் வெற்றிப் பெற போவது யாரென்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதற்கான விடை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜுன் 4 ஆம் தேதி தெரிந்துவிடும்.

காஞ்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள்
காஞ்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் (GFX CREDIT - ETV Bharat TamilNadu)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 31, 2024, 12:58 PM IST

காஞ்சிபுரம்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனரான அண்ணா பிறந்த, கோயில் நகரமான காஞ்சிபுரம், அரசியல், ஆன்மிகம் என இரு வகையிலும் முக்கியத்துவம் பெற்றதாக திகழ்கிறது. நீண்டகாலமாகப் பொதுத் தொகுதியாக இருந்த செங்கல்பட்டு, 2009ம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப் பிறகு காஞ்சிபுரம் தனித் தொகுதியாக அறிவிக்கப்பட்டது.

சட்டமன்ற தொகுதிகள்:தமிழ்நாட்டில் ஆறாவது நாடாளுமன்றம் தொகுதியாக இருக்கும் காஞ்சிபுரத்தில் காஞ்சிபுரம், உத்திரமேரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம்(தனி) , திருப்போரூர், செய்யூர்(தனி) ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன.

வாக்காளர்கள் எவ்வளவு?:காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை 8 லட்சத்து 46 ஆயிரத்து 16 ஆண் வாக்காளர்களும், 8 லட்சத்து 86 ஆயிரத்து 636 பெண் வாக்காளர்கள், 294 மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 17 லட்சத்து 32 ஆயிரத்து 946 வாக்காளர்கள் உள்ளனர்.

2019 தேர்தல் வாக்குப்பதிவு நிலவரம்?:கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் 16 லட்சத்து 43 ஆயிரத்து 656 மொத்த வாக்காளர்கள் இருந்தனர். இதில் 12 லட்சத்து 14 ஆயிரத்து 86 வாக்குகள் பதிவாகின. இதில் திமுக வேட்பாளர் செல்வம் 6 லட்சத்து 84 ஆயிரத்து 4 வாக்குகளை அள்ளினார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மரகதம் 3 லட்சத்து 97 ஆயிரத்து 372 வாக்குகளை பெற்றார்.

நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சிவரஞ்சனி 62 ஆயிரத்து 771 வாக்குகளை பெற்றார். திமுக வேட்பாளர் செல்வம் தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் மரகதத்தை 2 லட்சத்து 86 ஆயிரத்து 632 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார்.

2024 தேர்தல் நிலவரம் என்ன?:கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் 12 லட்சத்து 53 ஆயிரத்து 582 வாக்குகள் பதிவாகின. மொத்த வாக்குப்பதிவு சதவீதம் 71.68 ஆக உள்ளது.

களம் கண்டுள்ள வேட்பாளர்கள்:இந்த முறை காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. திமுக சார்பில் சிட்டிங் எம்பியாக உள்ள செல்வம் மீண்டும் களமிறக்கப்பட்டுள்ளார். அதிமுக வேட்பாளராக ராஜசேகர் களமிறங்கி உள்ளார். பாமக வேட்பாளராக ஜோதி வெங்கடேசன், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக சந்தோஷ் குமார் ஆகியோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பிரச்சார வியூகம் சொல்வது என்ன?: இதில் திமுக வேட்பாளரான சிட்டிங் எம்பி செல்வம் தொகுதி மக்களிடையே நன்கு அறிமுகமானவர். மற்ற வேட்பாளர்கள் யாரும் தொகுதி மக்களுக்கு அவ்வளவாக தெரிந்தவர்கள் இல்லை என கூறப்படுகிறது. இம்முறை, செல்வத்தை ஆதரித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டனர். அப்போது மத்திய அரசின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருட்கள் விலையேற்றம் உள்ளிட்டவற்றை கூறி அவர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதேபோல், அதிமுக வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, திமுக ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பாமக வேட்பாளர் ஜோதி வெங்கடேசனை ஆதரித்து அன்புமணி, அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மத்திய அரசின் திட்டங்களை கூறியும், திராவிட கட்சிகளை விமர்சித்தும் பிரச்சாரம் மேற்கொண்டனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சந்தோஷ் குமாரை ஆதரித்து சீமான் வழக்கம்போல் தனது பாணியில் தமிழ்நாடு அரசையும், மத்திய அரசையும் விமர்சித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

வெற்றியை கணிக்க முடியாத காஞ்சி தொகுதி:இதுவரை எந்தவொரு குறிப்பிட்ட கட்சிக்கும் வெற்றி சாதகமாக இருந்ததில்லை என்பதே காஞ்சி தொகுதியின் தேர்தல் வரலாறாக இருந்து வருகிறது. அதாவது இங்கு திமுக, அதிமுக, காங்கிரஸ் என அனைத்து கட்சியும் மாறி மாறி வெற்றி பெற்றுள்ளன. தொகுதியில் மக்கள் பிரச்னைகளை கையாளுவதை பொறுத்தே வாக்காளர்கள் வாக்களித்து வருகின்றனர்.

இத்தொகுதியில் இதுவரை நடைபெற்றுள்ள தேர்தல்களில் காங்கிரஸ், அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் திமுக வேட்பாளராக மீண்டும் களமிறங்கி உள்ள செல்வம், சென்ற முறை வெற்றி பெற்று தொகுதி மக்களிடையே நன்கு பரிச்சயம் ஆகி உள்ளார். ஆனால் இவரை எதிர்த்து போட்டியிட்டுள்ள அதிமுக வேட்பாளர் ராஜசேகர் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் அல்ல; சென்னை புறநகர் பகுதியைச் சேர்ந்தவர். இது திமுக வேட்பாளர் செல்வத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுக, பாமக இடையே இம்முறை கடும் போட்டி நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை 62 ஆயிரத்த்துக்கும் அதிகமான வாக்குகளை வாங்கிய நாம் தமிழர் கட்சியும் இவர்களுக்கு டஃப் கொடுக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நான்குமுனைப் போட்டியில் இம்முறை காஞ்சியில் வெற்றிக்கொடி நாட்டப் போவது யார் என்பது வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ம் தேதி தெரிந்துவிடும்.

இதையும் படிங்க: தேர்தல் 2024: மாற்றத்தை எதிர்நோக்குகிறதா கடலூர் தொகுதி? வெற்றி யார் பக்கம்? - LOK SABHA ELECTION 2024

ABOUT THE AUTHOR

...view details