சென்னை:தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை காலை 11 மணியளவில் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை விமான நிலையத்திலிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். அவருடன் ஆளுநரின் செயலாளர், பாதுகாப்பு அதிகாரி உள்ளிட்டோரும் புறப்பட்டுச் செல்கின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 59 நபர்கள் உயிரிழந்த சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சிகுள்ளாகியுள்ளது. மேலும், 80க்கும் மேற்பட்டோர் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சையில் உள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுமார் 15க்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கள்ளச்சாராய விவகாரத்தில் மெத்தனால் சப்ளை செய்த முக்கிய குற்றவாளிகளையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் வழக்கை விரைவாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் சிபிஐ விசாரணை வேண்டுமென வலியுறுத்தி வந்தனர். சிபிஐ விசாரணையை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்து மனு அளித்துள்ளனர்.
இந்நிலையில், நாளை (புதன்கிழமை) காலை ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி புறப்பட்டுச் செல்லும் நிலையில், அங்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் முக்கிய மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோரைச் சந்தித்து கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இதனைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரையும் ஆளுநர் ஆர்.என்.ரவி சந்தித்துப் பேச உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதனைத் தொடர்ந்து, ஆளுநர் எப்போது சென்னை திரும்புகிறார் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை. தமிழகத்தில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் சிபிஐ விசாரணை நடத்த கோரிக்கை வைத்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை டெல்லி புறப்பட்டுச் செல்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:“கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அறிக்கை தயார்” - தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல்! - KALLAKURICHI Hooch Tragedy Report