சென்னை : 2024 - 25ம் கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் 433 கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் 2 லட்சத்து 33 ஆயிரத்து 376 இடங்களில் மாணவர்களை சேர்ப்பதற்கு அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி வழங்கியது. அதில், ஒற்றை சாரள முறையிலான கலந்தாய்வில் தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை மூலம் 1 லட்சத்து 79 ஆயிரத்து 938 இடங்கள் நிரப்புவதற்கு அனுமதிக்கப்பட்டது.
கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி பேட்டி (Credit - ETV Bharat Tamilnadu) தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, தரவரிசை பட்டியல் வெளியிட்டப்பட்டன. அதனைத் தொடர்ந்து சிறப்புப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. பொதுப்பிரிவு மற்றும் துணை கலந்தாய்வு கடந்த ஜூலை 22ம் தேதி தொடங்கி செப்டம்பர் 8ம் தேதி வரை நடைபெற்றது.
இந்நிலையில் சிறப்புப்பிரிவு, பொதுப்பிரிவு , துணை கலந்தாய்வு முடிவுற்ற நிலையில் 1 லட்சத்து 31 ஆயிரத்து 706 மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 48 ஆயிரத்து 232 இடங்கள் காலியாக உள்ளது.
இதையும் படிங்க :பி.இ., பி.டெக்., மாணவர் சேர்க்கை: உள் ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு எப்போது? - BE and BTech Couseling
இது குறித்து கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி கூறும்போது, "பொறியியல் மாணவர் சேர்க்கையில் அனுமதிக்கப்பட்ட இடங்களில் 72.45 சதவீதம் ஒதுக்கீடு செய்துள்ளனர். அதில், கொங்கு மண்டலமான கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் 83.85 சதவீதம் இடங்கள் நிரம்பி உள்ளது.
ஜெயபிரகாஷ் காந்தி பகுப்பாய்வு விவரங்கள் (Credits - ETV Bharat Tamil Nadu) சென்னை மண்டலத்தில் உள்ள திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கல்லூரிகளில் 75.61% ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொறியியல் படிப்பினை பொறுத்தவரையில் கோயம்புத்தூர், சென்னை மண்டலம் தான் அதிகளவில் விரும்பி சேர்கின்றனர்.
கல்லூரியில் உட்கட்டமைப்பு, தொழிற் நிறுவனங்கள், வேலை வாய்ப்பு பெற்றுத் தருவது போன்றவற்றுடன், மாணவர்கள் நகர்புறப்பகுதிகளில் படித்தால் வாய்ப்புகளை பெறுவர். சென்னை, கோயம்புத்தூர் மண்டலத்தில் போக்குவரத்து வசதியும் செய்து தருவர். இதனால் விடுதியில் தங்காமல் வீட்டில் இருந்தே படிக்கலாம் என்பதால் அதிகளவில் விரும்பி சேர்ந்துள்ளனர்" என தெரிவித்தார்.