தமிழ்நாடு: தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் 19ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அனைத்து கட்சி வேட்பாளர்களும், நிர்வாகிகளும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, மக்கள் மனதில் இடம் பிடிப்பதற்காகத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இட்லி விற்பனை செய்தும், வடையைக் காண்பித்தும், இஸ்திரி செய்தும், நடனமாடியும், விழிப்புணர்வை ஏற்படுத்தியும் வாக்குகள் சேகரித்தனர்.
இட்லி விற்பனை செய்து வாக்கு சேகரிப்பு: புதுச்சேரியில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்தை ஆதரித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அனந்தராமன் தானாம் பாளையம் பகுதியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது இட்லிக் கடையில் இட்லி விற்பனை செய்தும், இட்லி சாப்பிட்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
வடையைக் காட்டி பிரச்சாரம்:தேனி நாடாளுமன்றத் தொகுதியின் அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக அதிமுகவின் செய்தி தொடர்பாளர் நடிகை சசிரேகா ஆண்டிபட்டியில் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் இரண்டு வடைகளைக் கையில் வைத்துக்கொண்டு இதில் ஒன்று பிரதமர் மோடி சுட்டவடை மற்றொன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சுட்ட வடை என்றும் கூறினார்.
கொடி அணிவகுப்பு ஊர்வலம்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் காவல்துறையினரின் கொடி அணிவகுப்பு ஒத்திகை நடைபெற்றது. ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், அச்சமின்றி பாதுகாப்பாகவும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றப் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் காவல்துறையினர் மற்றும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு ஊர்வலம் நடைபெற்றது.