சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு மாநிலச் சட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் மூலமாக ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 37 மையச் சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு மாநிலச் சட்டங்கள் என மொத்தம் 100 சட்டப் புத்தகங்களை வெளியிட்டார்.
அதன்படி, தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட 37 மையச் சட்டங்கள் மற்றும் 63 தமிழ்நாடு சட்டங்களில் 43 மறுமதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள், 20 புதிய பதிப்பு செய்யப்பட்ட சட்டங்கள் என மொத்தம் 100 சட்டப் புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இதில் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013, குலுக்குச் சீட்டுகள் சட்டம் 1998, இந்திய அரசுச் சின்னம் (முறையற்று பயன்படுத்தப்படுவதை தடை செய்தல்) சட்டம் 2005, சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் சட்டம் 2005 உள்ளிட்ட சட்ட புத்தகங்களை வெளியிட்டார்.