சென்னை: திமுக கட்சியின் பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலுவின் நூல் வெளியிட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஜன.23) நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "நாடாளுமன்ற உறுப்பினரான டி.ஆர்.பாலு எழுதியுள்ள "பாதை மாறாப் பயணம்" புத்தகத்தின் மூன்றாவது பாகத்தை வெளியிடுகிறேன். பாலுவைப் பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், சின்சியாரிட்டி. ஏதாவது சொன்னோம் என்றால், அதை முடித்துவிட்டுத்தான் அடுத்த ஃபோனே செய்வார்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "பா.ஜ.க.வை வீழ்த்தப் போகும் இந்தியா கூட்டணியின் உருவாக்கத்தில் நம்முடைய பாலுவிற்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தை மனதில் வைத்து, எல்லோரும் கடமையாற்ற வேண்டும்.ஏனென்றால், நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது, யார் ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்காக நடைபெறும் தேர்தல்.
கடந்த பத்தாண்டுக் காலமாக, மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதையும் செய்யாமல், பேரிடர் பாதிப்புக்குக் கூட நிதி ஒதுக்காமல் இறுதிக் காலத்தில் ஒரு கோயிலைக் காட்டி, மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறது பா.ஜ.க. தலைமை.
தேர்தலைச் சந்திக்க இருக்கும் பா.ஜ.க.விற்கு மக்களிடம் சொல்வதற்குச் சாதனை என்று எதுவும் இல்லை. அதனால்தான் முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத கோயிலை, அவசர அவசரமாகத் திறந்து, எதையோ சாதித்துவிட்டதாகக் காட்ட நினைக்கிறார்கள். இது மாதிரியான திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் கொடுப்பார்கள். இது உறுதி.
எல்லா வகையிலும் மக்களை நசுக்கிய ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி. அந்தக் கோபம் மக்கள் மனதில் இருக்கிறது. தமிழ்நாட்டில் நாம் வலுவான கூட்டணியை அமைத்திருப்பது போன்று, இந்தியா முழுமைக்கும் வலுவான கூட்டணியை உறுதி செய்தாக வேண்டும்.
இந்தியா கூட்டணிக் கட்சிகள், தங்களுக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அந்தந்த மாநிலங்களில் நடத்தி வருவதாகச் செய்திகள் வருகிறது. விரைவில் எல்லாம் நல்லபடியாக முடிந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் ஒரு ஒன்றிய அரசை உருவாக்க நாமெல்லாம் தேர்தல் களத்தில் நுழைகிறோம். அதற்கும், டி.ஆர்.பாலு தயாராக வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தப் பணிகளை எல்லாம் வெற்றிகரமாக முடித்த பிறகு, இந்த பாதை மாறாப் பயணத்தின் அடுத்தடுத்த பாகங்களை எழுதுவதற்கான வேலைகள் நம்முடைய டி.ஆர்.பாலுவுக்குக் காத்திருக்கிறது. தமிழ்நாட்டு முன்னேற்றத்தின் வரலாற்றைச் சொல்ல, திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றை, கருணாநிதி வரலாற்றை, இந்தத் திராவிட மாடல் அரசின் வரலாற்றைத் தொடர்ந்து கழகத்தினர் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து விடைபெறுகிறேன்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:ராமர் கோயிலில் திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்! கூட்ட நெரிசல்.. தள்ளுமுள்ளு!