சென்னை:கலைவாணர் அரங்கத்தில் உள்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறை காவலர்கள் மற்றும் தீயணைப்பாளர்கள் ஆகிய பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 3359 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை தமிழக முதல்வர் இன்று வழங்கினார்.
இதையடுத்து நிகழ்ச்சியில் முதல்வர் உரையாற்றியபோது, "சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கக்கூடிய சிறப்பான நிகழ்ச்சியில் காவல்துறையினர் என்றால் யார் என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னதை சொல்லி, உங்களை வரவேற்க விரும்புகிறேன். தங்களால் உருவாக்கப்படாத பிரச்சினைகளுக்கு, தீர்வு காண வேண்டியவர்கள், முரண்பாடு ஏற்படும் இடங்களில், முதல் ஆளாக நிற்க வேண்டியவர்கள், எல்லா விதங்களிலும் சகிப்புத்தன்மையுடன் நடக்க வேண்டியவர்கள், உள்ளக் கொந்தளிப்பு அடையாமல் பற்றற்ற அமைதியுடன், நடந்துகொள்ள வேண்டியவர்கள், பெற்ற சிறந்த பயிற்சிக்கு ஏற்ப கடமையுணர்ச்சி மிக்கவர்களாக, இருக்க வேண்டியவர்கள், இப்படி இன்ப, துன்பங்களைத் துறந்து, ஊண், உறக்கம் மறந்து, கடமை – கண்ணியம் – கட்டுப்பாடோடு பணியாற்ற வந்திருக்கக்கூடிய காவலர்கள் அனைவரையும் வருக, வருக என நான் வரவேற்கிறேன்.
புதிதாக தமிழ்நாடு காவல்துறையில் இணைந்திருக்கும் உங்களுக்கு ஏராளமான கடமைகள் காத்திருக்கிறது. Law and Order-யை பாதுகாப்பதுடன் குற்றங்களே நடைபெறாமல் தடுப்பது தான் நம்முடைய இலக்காக இருக்கவேண்டும் என்று தொடர்ந்து நான் சொல்லிக்கொண்டு வருகிறேன்.
நமக்கு முன்னால் இருக்கும் முக்கியமான சவால்கள் என்ன என்றால், சைபர் குற்றங்கள், போதைப் பொருள் ஒழிப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்! இந்த சவால்களை எதிர்கொள்ள உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளவேண்டும்! இந்தச் சமூகக் குற்றங்களை களைப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு சமூக நோய்கள் உங்களை தாக்காமல் தற்காத்துக்கொள்வதும் முக்கியம்!