சென்னை:தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியின் படி, சாலிகிராமம் பகுதியில் மக்கள் தொடர்பு அலுவலகத்தை பாஜக சார்பில் தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட தமிழிசை சௌந்தரராஜன் திறந்து வைத்தார். அதன் பின்னர், செய்தியாளர்களை அவர் சந்தித்துப் பேசினார்.
தமிழிசை செளந்திரராஜன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) அப்போது பேசிய அவர், "ஏறக்குறைய மூன்று லட்சம் வாக்காளர்கள் தென்சென்னையில் வாக்களித்திருக்கிறார்கள். 21 மடங்கு தென் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. வெற்றி பெற்றால் ஆறு சட்டமன்றத் தொகுதியில் மக்கள் தொடர்பு அலுவலகம் திறக்கப்படும் என்று தெரிவித்திருந்தேன்.
மக்கள் வெற்றியைத் தரவில்லை. இருந்த போதிலும், இங்கு மக்கள் தொடர்பு அலுவலகம் செயல்படும். இதை இப்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள எம்.பி செய்யப் போவதில்லை. 5 ஆண்டுகள் கழித்து வாக்கு கேட்க வெளியே வந்தார். தற்போது மீண்டும் உள்ளே சென்று விட்டார், இனி வெளியே வர மாட்டார்.
திமுக வேட்பாளர் பேசுவதைப் போல் எங்களுக்கு பேச தெரியாது. பம்மாத்து போன்ற வார்த்தைகள் எல்லாம் நாங்கள் பயன்படுத்த மாட்டோம். நான் தமிழகத்தில் 25 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். ஆளுநராகவும் இருந்துள்ளேன். அவர்கள் எல்லாம் அனுபவத்தில் என் அருகில் கூட நிற்க முடியாது.
உண்மையில், தென் சென்னை மக்கள் ஒரு நல்ல வேட்பாளரை தேர்ந்தெடுக்க தவறிவிட்டார்கள். ஸ்டாலின் போன்றவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன், உங்கள் இணையதளவாசிகளை அடக்கி வையுங்கள். மீண்டும் பரட்டை என்று விமர்சனம் செய்கின்றனர். பரட்டை என்றாலும் இது ஒரிஜினல்" என கடுமையாக பேசினார்.
2026 எங்களுக்கானது: தொடர்ந்து பேசிய அவர், "தென் சென்னையில் மக்கள் எங்களை தேர்ந்தெடுக்கவில்லை என்றாலும், நாங்கள் தான் நாடாளுமன்ற உறுப்பினர். தென் சென்னை பகுதியில் எங்கு குப்பை உள்ளது, எங்கு சாலை பிரச்னை உள்ளது என்பதெல்லாம் எங்களுக்குத் தான் தெரியும். நீங்கள் சரி செய்யவில்லை என்றால் நானே இறங்கி போராடுவேன்.
நான் இப்போது முன்னாள் ஆளுநர் அல்ல, முன்னாள் பாஜக மாநிலத் தலைவராக இருக்கிறேன். மக்கள் சேவையில் திமுக தென் சென்னை வேட்பாளரெல்லாம் என் பக்கத்தில் கூட நிற்க முடியாது. பிரதமர் மோடி ஆட்சியில் இருக்கும் வரை, மத்தியில் நிலையான ஆட்சி தான் இருக்கும். தமிழகத்தில் அரசியலை தீவிரப்படுத்த உள்ளோம். 2026-க்கான களம் எங்களுக்கானது" எனத் தெரிவித்தார்.
மீண்டும் அதிமுக கூட்டணியா? அதனைத் தொடர்ந்து அதிமுக உடனான கூட்டணி அண்ணாமலையில் கருத்து குறித்து செய்தியாளர் கேட்ட கேள்விக்கு, "அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்தால் இன்று திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்பது கணக்கு ரீதியாக உண்மை. மேலும், கூட்டணி என்பது அரசியல் வியூகம். கூட்டணி வைத்திருந்தால் நிச்சயம் கூடுதல் இடம் கிடைத்திருக்கும்.
எங்கள் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு எதுவும் அரசியலில் கிடையாது, வியூகத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் உண்மை. அதிமுகவினர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் என இருவருமே கூட்டணி வைத்திருக்கலாம் என கூறியுள்ளனர், அது எதார்த்தமான உண்மைதான். இங்கு வாக்குகள் பிரிந்ததால் தான் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்றிருக்கிறது" என்று பதிலளித்தார்.
மேலும், "திமுகவினர் ஆட்டை பலி கொடுப்பது போன்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருப்பது, எதிர்க்கட்சிகளின் மிக மோசமான நடவடிக்கை. மிகவும் கொடூரமாக சித்தரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்ட காட்சி. அது மனதிற்கு வருத்தமளிக்கிறது. விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்ததாக பிரேமலதா விஜயகாந்த் கூறியதில் உண்மை இருக்க வாய்ப்பிருக்கிறது. மேலும், மறுவாக்கு எண்ணிக்கை நடத்துமாறு கேட்க அவர்களுக்கு உரிமை உள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:அதிமுக - பாஜக கூட்டணி பிரிவுக்கு அண்ணாமலை தான் காரணம்.. எஸ்.பி.வேலுமணி கடும் தாக்கு!