தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

“திரித்து பேசி அரசியல் ஆதாயம் தேடுகிறார் மு.க.ஸ்டாலின்”.. தமிழிசை செளந்தரராஜன் பதிலடி! - Tamilisai Soundararajan - TAMILISAI SOUNDARARAJAN

Tamilisai Soundararajan: தமிழர்களை பிரதமர் மோடி இழிவுபடுத்தியதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்த நிலையில், ஒரு தனிநபரை பற்றி கூறியதை இப்படி திரித்து பேசி அரசியல் ஆதாயம் தேட பார்ப்பதாக பாஜக வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழிசை செளந்தரராஜன்
மு.க.ஸ்டாலின் மற்றும் தமிழிசை செளந்தரராஜன் (Credits - DMK and Tamilisai Soundararajan 'X' pages)

By ETV Bharat Tamil Nadu Team

Published : May 22, 2024, 9:48 PM IST

சென்னை:இது தொடர்பாக பாஜக மூத்த தலைவரும், அக்கட்சியின் தென்சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான தமிழிசை செளந்தராரஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடி ஒட்டுமொத்த தமிழர்களையெல்லாம் அவமதித்துவிட்டதாக ஒரு கருத்தை வேண்டுமென்றே பரப்பிக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி கூறியது, ஒரிசாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரத்தில் இல்லாமல் அதிகாரியாக இருந்துகொண்டு பினாமியாக பின்புலத்திலிருந்து ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தையே ஆட்டி படைத்துக்கொண்டிருக்கும் ஒருவர், மக்களுக்கு கிடைக்க வேண்டியதை கிடைக்காமல் தடுக்கிறார் என்ற உண்மை நிலையை எடுத்துச் சொல்வதற்காக அந்த தனிநபரை குறிப்பிட்டு பேசினார்.

அவர் குறிப்பிட்டு பேசிய நபர் தமிழராக இருப்பதால் ஒட்டுமொத்த தமிழர்களையே அவமதித்துவிட்டதாக என்று ஸ்டாலின் திரித்து கூறுவது, தமிழர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் அவமானப்படுத்துகிறார் என்றுதான் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். தவறான முன்னுதாரணமாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவரை குறிப்பிடும்போது, ஒட்டுமொத்த தமிழர்களையும் அவர் அவமதிக்கிறார் என்று கூறிய ஸ்டாலின் தான் இந்த அவமரியாதையை எல்லா தமிழர்களையும் பற்றி குறிப்பிடுவதாக திரித்து பேசுகிறார். ஆக, என்னைப் பொறுத்தவரை மு.க.ஸ்டாலின் தான் திரித்து பேசி வழக்கம்போல் பொய் பிரச்சாரம் செய்கிறார்.

காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த சாம் பிட்ரோடா என்பவர், தமிழர்கள் உள்பட தென்னிந்தியர்களை எல்லாம் ஆப்பிரிக்க இனத்தைச் சார்ந்தவர்கள் போல் கருப்பாக உள்ளனர் என்று கூறும்போது அது தமிழர்ளையும் உள்ளடக்கியது தான் என்ற போதிலும் திமுகவினர் எந்தவித எதிர்ப்பையும் தெரிவிக்காமல் இருந்தார்கள். மாறாக சாம் பிட்ரோடா கூறியது நிலப்பரப்பை பற்றிதான், மக்களை அல்ல என்று புது விளக்கம் அளித்தார்கள்.

இன்று ஒரு தவறான முன்னுதாரணமாக இருக்கக்கூடிய தமிழரை குறிப்பிட்டதற்கே எல்லா தமிழர்களையும் உள்ளடக்கிய தமிழினத்தை அவமானப்படுத்திவிட்டார் பிரதமர் என்று சொல்லும் ஸ்டாலின், அன்று மத்திய,மாநில ஆட்சியில் இருந்தபோது இலங்கையில் நம் தமிழ் சொந்தங்கள் படுகொலை நடந்த போது ஆட்சியில் அமர்ந்து கொண்டு வேடிக்கை பார்த்த நீங்கள்தான் தமிழின விரோதிகள்.

பாரதிய ஜனதா கட்சி, தமிழகத்தைச் சார்ந்த திருநாவுக்கரசு, இல.கணேசன் தற்போது மத்திய அமைச்சராக உள்ள எல்.முருகன் போன்றவர்களை தமிழர்களுக்கு பாராளுமன்றத்தில் அடையாளம் கொடுக்க வேண்டும் என்பதற்காக வேறு மாநிலத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட போது நீங்கள் பாராட்டியிருந்தால் உண்மையிலேயே நீங்கள் தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கிறீர்கள் என்று வேண்டுமானால் கூறிக்கொள்ளலாம்.

புதிய பாராளுமன்றத்தில் நம் தமிழர்களின் பண்பாட்டுச் சின்னமான செங்கோலை நிறுவி பாராளுமன்ற திறப்பு விழாவிற்கு தமிழக ஆன்மீகப் பெரியவர்களை அழைத்து, கெளரவித்து தமிழ்நாட்டின் பெருமையை நிலை நிறுத்தியவர் பிரதமர் நரேந்திர மோடியை பாராட்டினீர்களா? மாறாக கேலி பேசினீர்கள். மோடி, குஜராத் மாநில முதலமைச்சாராக இருந்தபோதும், முதலமைச்சர் அலுவலகத்திலும் பிரதமர் அலுவலகத்திலும் உயர் தலைமை பொறுப்பில் பல தமிழக IAS அதிகாரிகளை உயர் பதவியில் அமர்த்தி நம் தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்தார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனும் தமிழர்கள் என்று என்றாவது திமுக பாராட்டியது உண்டா? அதேபோல, நம் ராஜேந்திரச் சோழனின் பெயரை மும்பையில் உள்ள துறைமுகத்திற்கு வைக்கும்போது தமிழர்களின் பெருமையை பாஜக மற்ற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்கிறது என்ற பெருமையை என்றாவது நீங்கள் பாராட்டி இருக்கிறீர்களா?

பிரதமர் மோடி, தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் பற்று கொண்டிருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல், ஒரு தனிநபரை பற்றி கூறியதை இப்படி திரித்து பேசி அரசியல் ஆதாயம் தேட பார்க்கிறீர்கள்.‌ பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் தமிழ்மொழியின் பெருமைக்கும், தமிழர்களுக்கும் பெருமை சேர்ப்பதற்கு அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வோம் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

நாங்கள் கூறியதைத்தான் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையாக தயாரித்தது என்று சொல்லும் மு.க.ஸ்டாலின், தமிழர்களின் பெருமையை பறைசாற்றுவதாக ஏதாவது அந்த தேர்தல் அறிக்கையில் இருக்கிறதா? ஆகவே உங்களது தமிழ்ப்பற்று என்பது போலியான தமிழ்ப்பற்று.

அரசியலுக்கான போலி தமிழ்ப்பற்று. பிரதமர் மோடியின் தமிழ்ப்பற்று என்பது உண்மையான தமிழ்ப்பற்று, அதை அவர் பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறார். இதைப் பொறுத்துக் கொள்ள முடியாத முதலமைச்சர், தமிழக மக்களுக்கும் பிரதமருக்கும் ஒரு இடைவெளியை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு தனிநபரை குறிப்பிட்டு பேசியதை ஒட்டுமொத்த தமிழர்களையும் பேசியதாக மு.க.ஸ்டாலின் திரித்து பேசுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

கடந்த காலங்களில் தமிழர்கள் மற்ற மாநில மொழிகளை அறிந்து கொள்ளக் கூடாது என்பதற்காக போலி ஹிந்தி எதிர்ப்பு. ஹிந்தி தெரியாது போடா என்ற வசனங்கள் எழுதிய பனியன்களை போட்டுக் கொண்டதும், வட‌ நாட்டு தொழிலாளர்களை பானிபூரி விற்க வந்தவர்கள் என்று ஏளனமாக பேசினீர்கள். மற்ற மாநில மொழிகள் தெரியாததால் தான் நீங்கள் உட்பட திமுகவினர் யாரும் மற்ற மாநிலங்களுக்குச் சென்று வாக்கு கேட்க முடியாமல் போனது தானே உண்மை.

தமிழ்ப்பற்று, தமிழர் என்ற போர்வையில் பிரிவினைவாதம் பேசுவது தானே உங்கள் அடி நாதம். தேர்தல் சமயத்தில் இந்தியாவை காப்போம், ஹிந்தியில் விளம்பரம் செய்வோம். மற்ற நேரத்தில் ஹிந்தி மொழியை எதிர்ப்போம். ஆகவே இப்படிப்பட்ட சரித்திரம் படைத்த நீங்கள் பிரதமரை விமர்சிப்பதற்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:மக்களவைத் தேர்தல் 2024: திமுகவுக்கு சிக்கலைக் கொடுக்கும் தொகுதிகள்! முடிவு என்ன வரும்? - Lok Sabha Election 2024

ABOUT THE AUTHOR

...view details