புதுச்சேரி: புதுச்சேரி சிறுமியின் கொலை வழக்கு சம்பந்தமாக, துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், காவல்துறை உயர் அதிகாரிகளுடன் இன்று (மார்ச் 6) அவசர ஆலோசனை நடத்தினார். ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் டிஜிபி ஸ்ரீநிவாஸ், சின்ஹா, எஸ்எஸ்பி அனிதா ராய், எஸ்எஸ்பி கலைவாணன் ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், "நான் ஏற்கனவே கூறியபடி விரைவு நீதிமன்றத்தின் ஒரு பகுதியாக. விசாரணையை தீவிரப்படுத்துவதற்காக, விரைவுபடுத்துவதற்காக அமைக்கப்பட்டு இருக்கிறது.
அதன் தலைவராக காவல்துறை அதிகாரி கலைவாணன் நியமிக்கப்பட்டு, அவர் நேற்று விசாரணையைத் தொடங்கி விட்டார். சிறுமி சம்பவம் போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடக்காமல் இருப்பதற்கும், இது போன்ற புகார்கள் வந்தால் மிக மிகத் தீவிரமாக உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல, போதைப்பொருள் ஏற்கனவே கட்டுப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால், இன்னும் தீவிரமாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
நான் ஏற்கனவே கூறியபடி, தமிழ்நாட்டில் பிடிபட்டு இருக்கும் சாதிக் என்பவரின் கூட்டாளிகள் இங்கே சில பேர் புதுச்சேரியிலிருந்து சில அரசியல் கட்சி தொடர்புடையவர்களாக இருக்கிறார்கள். எந்த அரசியல் கட்சியோடு தொடர்புடையவரோ, அந்த அரசியல் கட்சியே கண்டனம் தெரிவிக்கிறார்கள்.
இங்கே போதைப்பொருள் அதிகமாக இருக்கிறது. போதை அதிகமாக இருக்கிறது என்று கூறி அவர்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களையும் உடனே கண்டுபிடித்து இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறோம்.
அதேபோல நமது சட்ட அமைப்பில் விரைவு நீதிமன்றத்தில் இந்த வழக்கு மிக விரைவாக விசாரணை செய்து குற்றவாளிகள் முழுமையாக நிரூபிக்கப்பட்டு உச்சபட்ச தண்டனை பெற்றுத் தர வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள்.
தவறு இழைத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை:அதனையும் நான் கேட்டேன். துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இரண்டு மணி நேரம் குடும்பத்தினர் தேடிவிட்டு, பிறகு ஐந்து முப்பது மணிக்கு புகார் தந்திருக்கிறார்கள். துரதிஷ்டவசமாக மிக துயரமான சம்பவம் அன்று மாலையே நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறுகிறார்கள்.
எப்படி இருந்தாலும் அது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. காவல்துறை அதிகாரிகள் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறேன். முத்தியால்பேட்டைப் பகுதியில் வளர்ச்சி இருக்கிறது. அதே சமயத்தில் சமூக விரோத செயல்பாடுகள் அதிகமாக இருக்கிறது. தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
சிறுமி விவகாரத்தில் நடவடிக்கை: சட்ட ரீதியாக சில ஆதாரங்கள் தேவைப்படுகிறது. உதாரணமாக டிஎன்ஏ பரிசோதனைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. குழந்தையின் உடல் அழுகிய நிலையிலிருந்ததினால் ஏற்கனவே சில தடயங்கள் கிடைத்தாலும் கூட உடலின் திசுக்களை எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவார்கள். அதிலிருந்து சரியாக முடிவுகள் வரவேண்டும். சட்ட ரீதியாக முழுமையான ஆதாரங்கள் கிடைத்த பிறகே நம் நடவடிக்கை எடுக்க முடியும்.
எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு: இதில் அனைவரின் கடமையும் இருக்கிறது. குற்றம் சாட்டுபவர்கள் ஏற்கனவே ஆட்சியிலிருந்தவர்கள் தான். தமிழ்நாட்டில் ஆட்சியில் இருப்பவர்கள் தான். அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் நடைபெறும் பிரச்னைகளுக்கு தொடர்பு இங்கே இருக்கிறது. அங்கே போதைப்பொருள் விற்பனை செய்பவரைத் தொடர்பு கொள்ள ஆட்கள் இங்கே இருக்கிறார்கள்.
குற்றம் சாட்டுவதன் மூலம் பிரச்னைகள் தீரப்போவது இல்லை. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செய்வது என்ன அர்த்தம் இருக்கிறது என்பதை அவர்கள் உணர வேண்டும். இதனை சுய ஆதாயத்திற்காக அவர்கள் பயன்படுத்தக் கூடாது.
என்னை எதிர்த்துப் பேசுபவர்களின் பக்கத்திலும் நான் நிற்கிறேன். உண்மையில் சொல்ல வேண்டும் என்றால் அந்தப் பகுதியிலிருந்தால் நானும் அந்த இடத்தில் போராட்டத்தில் இறங்கி இருப்பேன். நாம் அனைவரும் ஒற்றுமை உணர்வுடன் இருக்க வேண்டுமே தவிர இதன் மூலம் ஆதாயம் தேடிக் கொள்ளும் ஆர்ப்பாட்டம் செய்வது என்பதை அவர்கள் முடிவு செய்து கொண்டது. அதில் நான் எதுவும் கருத்துச் சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:சென்னையில் தொடர் வெடிகுண்டு மிரட்டல்.. இமெயில் தகவலை பகிர்ந்த சுவிட்சர்லாந்து நிறுவனம்!