சென்னை:தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக ஜொலித்து வரும் நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த பிப்ரவரியில் தொடங்கினார். இந்த நிலையில், வருகிற அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் தவெக முதல் மாநில மாநாடு நடைபெற உள்ளதாக விஜய் அறிவித்தார்.
அது மட்டுமல்லாமல், இந்த மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் மற்றும் கொடி விளக்கம் ஆகியவற்றைத் தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். இதனிடையே, இன்று காலை 4 மணியளவில் தவெக மாநாடு நடைபெறுவதற்கான பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றனர்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே. உங்களை நானும், என்னை நீங்களும் நினைக்காத நாளில்லை. அவ்வளவு ஏன்? நினைக்காத நிமிடம்கூட இல்லை. ஏனெனில், நம்முடைய இந்த உறவானது தூய்மையான குடும்ப உறவு. அந்த உணர்வின் அடிப்படையில்தான் இந்தக் கடிதம். அதுவும் முதல் கடிதம்.
தமிழ்நாட்டு மக்களுக்காக நாம் உழைக்க வேண்டும். இன்னமும் முழுமை பெறாத அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிரந்தரமாகப் பூர்த்தி செய்ய வேண்டும். அதை, அரசியல் ரீதியாக சட்டப்பூர்வமாக, உறுதியாக நிறைவேற்றிக் காட்ட வேண்டும். இதுதான் என் நெஞ்சில் நீண்ட காலமாக அணையாமல், கொழுந்துவிட்டு எரிந்துகொண்டே இருக்கும் ஒரு லட்சியக் கனல்.
இன்று, நமது முதல் மாநில மாநாட்டுக்கான கால்கோள் விழா இனிதே நடந்தேறி இருக்கிறது. இது மாநாட்டுத் திடல் பணிகளுக்கான தொடக்கம். ஆனால், நம் அரசியல் களப் பணிகளுக்கான கால்கோள் விழா என்பதும் இதில் உள்ளர்த்தமாக உறைந்து கிடக்கிறது என்பதையும் நீங்கள் அறிவீர்கள்.
நம் மாநாடு எதற்காக என்பதை நீங்கள் அறிவீர்கள்தானே? நம் கட்சியின் முதல் மாநில மாநாடு என்பது நம்முடைய அரசியல் கொள்கைப் பிரகடன மாநாடு. இன்னும் சரியாகச் சொல்ல வேண்டுமெனில், இது நம்முடைய கொள்கைத் திருவிழா. அதுவும் வெற்றிக் கொள்கைத் திருவிழா. இப்படிச் சொல்லும்போதே, ஓர் எழுச்சி உணர்வு, நம் நெஞ்சில் தொற்றிக்கொள்கிறது. இது, தன் தாய்மண்ணை நிஜமாக நேசிக்கும் அனைவருக்கும் இயல்பாக நிகழ்வதுதான்.
இந்த வேளையில், ஒன்றே ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என விரும்புகிறேன். அதை நாம் எப்போதும் ஆழமாக மனத்தில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். பொறுப்பான மனிதனைத்தான் குடும்பம் மதிக்கும். பொறுப்பான குடிமகனைத்தான் (Citizen) நாடு மதிக்கும். அதிலும் முன்னுதாரணமாகத் (Role model) திகழும் மனிதனைத்தான் மக்கள் போற்றுவர். ஆகவே, நம் கட்சியினர் இம்மூன்றாகவும் இருக்க வேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.