தவெக கொடி உணர்த்துவது என்ன? விளக்கமளித்த விஜய் - TVK FLAG EXPLAINED
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு இன்று (அக்டோபர் 27) அதன் தலைவர் விஜய் தலைமையில் நடந்தது. அதில், தனது கட்சியின் கொடிக்கான காரணத்தை, விஜய் காணொளி வாயிலாக தொண்டர்களுக்கு உணர்த்தினார்.
தவெக கட்சி கொடியைக் குறித்து அதன் தலைவர் விஜய் விளக்கமளித்தார். (ETV Bharat Tamil Nadu)
விக்கிரவாண்டி/விழுப்புரம்:தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு லட்சக்கணக்கிலான தொண்டர்கள் சூழ விக்கிரவாண்டி வி.சாலையில் நடக்கிறது. இதில் தவெக தலைவர் விஜய் கட்சியின் கொடிக்கான காரணத்தை தெளிவாக தொண்டர்களுக்கு காணொளி காட்சியின் வாயிலாக உணர்த்தினார்.
அப்போது, எதற்காக அடர் ரத்தச்சிவப்பு நிறம், மஞ்சள் நிறம் எதை உணர்த்துகிறது, வாகை மலர் எதற்காக இரு போர் யானைகள் நடுவில் வைக்கப்பட்டது என அனைத்தும் காணொளியில் தெளிவாகக் காட்சிப்படுத்தப்பட்டது.
தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கான காரணம் என்ன?
கொடி என்றாலே வீரத்திற்கும், வெற்றிக்குமான குறியீடு எனக் கூறியுள்ளார் தவெக தலைவர் விஜய். தவெக கொடியைக் குறித்து விஜய் காணொளியில் தொடர்ந்து பேசியது கீழ்வருமாறுப் பார்க்கலாம்.
அடர் ரத்தச்சிவப்பு நிறம்: பொதுவாகவே சிவப்பு நிறம் புரட்சியின் குறியீடாகும். அந்த வகையில், இது அனைவரின் கவனத்தையும் பளிச்சென்று ஈர்க்கும் வகையில் இருக்கும். இது கட்டுப்பாட்டை, பொறுப்புணர்வை, சிந்தனைத் திறனை, செயல் தீவிரம் ஆகியவற்றை சொல்லும் நிறம் ஆக இருக்கிறது.
மஞ்சள் நிறம்: இது மகிழ்ச்சி, நம்பிக்கை, லட்சியம், மனத்தெளிவு, உற்சாகம், ஆற்றல், நினைவாற்றலைத் தூண்டுவது என இலக்கை நோக்கி உறுதியோடு ஓட வைக்கும் நிறமாகும்.
வாகைப்பூ: இது வெற்றிக் குறியீட்டிற்கானப் பூ. போரில் வெற்றியோடு திரும்பும் மன்னனும், அவரது படையும் வாகைப்பூ சூடி வந்தார்கள் எனும் வர்ணனையை நாம் செய்யுள்களில் படித்திருப்போம். ஆனால், மன்னர் பெரும்பிடுகு முத்தரையர் போருக்குச் செல்லும் முன்னே வெற்றியைக் கணித்து வாகைப்பூ சூடியபடி சென்றார் என்கிறது வரலாறு. இங்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இருக்கும் வாகைப்பூ, மக்கள் வெற்றியைக் குறிப்பதாகும். இன்னும் சொல்ல வேண்டும் என்றால், நம் மண்ணின் வெற்றிக்கானது. எனவே, நாம் நெஞ்சாற நேசிக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும், உலகெங்கும் வாழும் தமிழர்களையும், ஒரே நேர்கோட்டு சித்தாந்தத்தில் பயணிக்க வைத்து, வெற்றி வாகைச் சூடப் போவதற்கான உறுதிபாட்டை குறிப்பதற்கு தான் வாகைப்பூ நம் கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ளது என தவெக தலைவர் விஜய் தெரிவித்தார்.
யானைகள்: மிகப்பெரிய பலத்தின் எடுத்துக்காட்டாக யானையைச் சொல்வார்கள். தன் நிறத்திலும், குணத்திலும், உருவத்திலும், உயரத்திலும் எப்போதுமே தனித்தன்மை கொண்டது தான் யானை. அதிலும், போர் யானைகள் தன்னிகரற்றது. போர் தந்திரம் பழகிய யானைகள், எதிரிகளோட படைகளைத் தகர்ப்பதில் கில்லாடிகள். தன்னோட முன்னங்கால்களை தூக்கி பிளிறிக்கொண்டு முன்னேறும் போர் யானைகள், எதிரிகளைப் போர் களத்தில் பீதியடைய வைக்கின்றன. அப்படிப்பட்ட இரட்டைப் போர் யானைகள் தான் தவெக கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ளது.
இந்த யானைகள் எப்படிபட்ட மதம் கொண்டவர்களையும் அடக்கி வழிக்குக் கொண்டுவரும் என சொல்லிய விஜய், இதன் உண்மையான கோடிங் (Coding), டிகோடிங் (Decoding) என அனைத்தும் புரிய வேண்டியவர்களுக்கு தெளிவாகப் புரியும் என எடுத்துரைத்தார்.