சென்னை:நடிகர் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' எனும் அரசியல் கட்சியைத் தொடங்கி, முக்கிய சில பிரச்சனைகளுக்கு குரல் எழுப்பி வருகிறார். கட்சி தொடங்கும் போதே வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என அறிக்கை மூலம் அறிவித்து இருந்தார்.
இதனையடுத்து 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சேர்க்கை, மாவட்டம்தோறும் ஆலோசனைக் கூட்டம், கட்சியின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர்.
குறிப்பாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், மாவட்ட வாரியாக நிர்வாகிகளுடன் உறுப்பினர் சேர்க்கை தொடர்பாகவும், நிர்வாகிகள் நியமனம் தொடர்பாகவும் ஆலோசனை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறும் என நேற்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன் காரணமாக, நாளை முதல் நடைபெற இருந்த ஆலோசனைக் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாக அக்கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளபடி, தேர்தல் அறிவிப்பிற்குப் பிறகு தீவிர உறுப்பினர் சேர்க்கைக்கான பணியில் ஈடுபடுமாறும், வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பிற கட்சிகளின் பணிகளுக்கோ அல்லது கூட்டங்களுக்குச் செல்லக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.