தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவர்களைச் சந்திக்கிறார் விஜய்.. தவெக தலைவராக முதல் மேடைப்பேச்சு.. எகிறும் எதிர்பார்ப்பு! - Tamilaga Vettri Kazhagam

TVK Vijay: 10 மற்றும் 12ஆம் வகுப்பில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணாவர்களுக்கு இரு கட்டங்களாக பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகையை நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் வழங்க உள்ளார்.

Vijay
விஜய் (Credits - Vijay 'X' Page)

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jun 10, 2024, 10:24 AM IST

சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கினார். அதேநேரம், நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும், யாருக்கும் ஆதரவில்லை என்றும் அறிவித்தார். ஆனால், 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள உள்ளதாகவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் என்ற புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ‘தளபதி விஜய்’ அவர்கள், 2024ஆம் ஆண்டு நடந்து முடிந்த 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள, தொகுதி வாரியாகச் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளைத் தமிழக வெற்றிக் கழகம் சார்பாகப் பாராட்ட உள்ளார்.

முதற்கட்டமாக 28-06-2024 வெள்ளிக்கிழமை அன்று, சென்னை திருவான்மியூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் பாராட்டு விழா நடக்கிறது. இதில் அரியலூர், கோயம்புத்தூர், தருமபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி. தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

அதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 03-07-2024 புதன்கிழமை அன்று செங்கல்பட்டு, சென்னை, கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், காரைக்கால். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுச்சேரி, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருப்பத்தூர், திருச்சி. வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் பாராட்டப் பெறுகிறார்கள்.

‘தளபதி விஜய்’ அவர்கள், மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர் முன்னிலையில் சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கிக் கௌரவிக்க உள்ளார் என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, கடந்த 2022 - 2023 கல்வியாண்டில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழையும், ஊக்கத்தொகையையும் விஜய் வழங்கினார்.

ஆனால், அப்போது நிகழ்வு நடந்த நள்ளிரவு வரை பாராட்டு விழா நடைபெற்றதால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் சிரமம் அடைந்தனர் என தகவல் வெளியானது. எனவே, இந்த முறை இரண்டு கட்டங்களாக மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற உள்ளது. மேலும், விஜய் கட்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கிய பிறகு முதல் முறையாக மேடையில் பேச உள்ளது பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, நேற்றைய தினம் பிரதமராக பதவியேற்றுக் கொண்ட நரேந்திர மோடிக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க:விஜய் பிறந்தநாளை பிரமாண்டமாக கொண்டாட திட்டம்..தவெக விரைவில் ஆலோசனை கூட்டம்?

ABOUT THE AUTHOR

...view details