சென்னை:நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர். தயாரிப்பாளர்களின் நடிகராக இருக்கும் விஜய் ஏராளமான வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படம் வெளியானது.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் என்ற படத்தில் நடித்து வருகிறார். நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வந்த நிலையில், அதனை 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார்.
மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றிய பிறகு பல்வேறு வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர். குறிப்பாக 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை மையப்படுத்தல், மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் நியமித்து கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கையைப் பலப்படுத்தி வருகிறார்.
இதற்காக ஆன்லைன் மூலம் கட்சியின் உறுப்பினர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே போல் முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் விஜய், இனி சினிமாவில் நடிக்கப் போவதில்லை என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.