சென்னை :தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு வரும் 27 ஆம் தேதி விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வி.சாலையில் நடைபெற இருக்கின்றது. இதற்கான ஏற்பாடுகளும் அங்கு தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சமீபத்தில் கூட மாநாட்டுக்கான பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் தலைமையில் பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
இந்நிலையில், தவெக சார்பில் மாநில மாநாட்டுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் செயல்வடிவக் குழுக்கள் அமைக்கப்படுள்ளன என்று அறிக்கை வெளியாகி உள்ளது. அதன்படி, மாநாடு ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி என்.ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதவிர பொருளாதாரக் குழு, சட்ட நிபுணர் குழு, வரவேற்புக் குழு, நிகழ்ச்சி ஒருங்கிணைப்புக் குழு, சுகாதாரக் குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு, வாகன நிறுத்தக் குழு ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.