சென்னை:தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், மக்களின் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் மழை குறித்து மக்கள் புகார் அளிப்பதற்கும் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழையும், நாளை அதிக கனமழையும் பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்துள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும், சாலைகளிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில் சென்னையின் பல இடங்களில் 50 மில்லி மீட்டர் மழை பெய்து வரும் நிலையில், இன்னும் சில நேரங்களில் 100 மில்லி மீட்டர் மழையை எட்டி செஞ்சுரி அடிக்கும் எனவும், சென்னையில் இடி மின்னல் பயமுறுத்தும் வகையில் இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.