சென்னை:வங்க கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்று அழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைய உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால், தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று (டிச.7) காலை 8.30 மணி அளவில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து சற்று வலுவடைந்து, மேலும் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் 11ஆம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை - தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும். மேலும் தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 7 முதல் டிசம்பர் 9 வரை:தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
டிசம்பர் 10:மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.