சென்னை: சிறுபான்மை நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ நாடாளுமன்றத்தில் வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்தார். இந்த சட்டத்திருத்ததிற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், 21 பேர் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு மசோதாவை அனுப்ப மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
வக்பு வாரிய சட்டம்:வக்பு வாரிய சொத்துகளை நிர்வகிக்க கடந்த 1954ஆம் ஆண்டு வக்பு சட்டம் இயற்றப்பட்டது. பின்னர், 1995-ல் சட்டத்தில் திருத்தம் செய்து, வக்பு வாரியங்களுக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கப்பட்டது. தொடர்ந்து, 2013ஆம் ஆண்டு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் சட்ட திருத்தம் செய்தது.
இந்நிலையில், மத்திய அரசு தற்போது மீண்டும் வக்பு வாரிய சட்டத்தில் 40 திருத்தங்களை செய்துள்ளது, சர்ச்சையாகி உள்ளது. அதன்படி, வக்பு வாரியத்தில் முஸ்லிம் அல்லாதவர்களும் இடம்பெறலாம். ஒவ்வொரு வாரியத்திலும் 2 பெண்கள் இடம்பெற வழிவகை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநில வக்பு வாரிய தலைவரின் கருத்து:வக்பு வாரிய சட்டத்தம் குறித்து தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் அப்துல் ரஹ்மான் ஈடிவி பாரத்திடம் கூறும் போது, "இஸ்லாமிய சமுதாயத்தை முன்னோர்கள் தயாள சிந்தனை உடையவரகள் மக்களின் பயன்பாட்டிற்காக அவர்களது சொத்துக்களை வழங்கினார்கள். அதுதான் தற்போது வக்பு சொத்துக்களாக உள்ளது.
அவற்றை முறையாக கண்காணிக்க, 1954ஆம் ஆண்டு வகுப்பு வாரிய சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர், 1958-ல் மாநிலத்தின் வக்பு வாரியங்கள் அந்தந்த மாநில அரசாங்கத்தின் மேற்பார்வையில் உருவாக்கப்பட்டது. மேலும், 1995ஆம் ஆண்டு அந்த சட்டம் முழுமை படுத்தப்பட்டது.
அதனை சிறப்பாக செயல்படுத்த, 2013ஆம் ஆண்டு மீண்டும் சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டு, சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது. முழுமையாக செயல்பட்டு வரும் இந்த சட்டத்தில் மேலும் சட்ட திருத்தம் செய்ய அவசியம் ஏற்படவில்லை. எந்த எண்ணத்தின் அடிப்படையில் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதை பார்க்க வேண்டும்.
சொத்துக்களை மீட்கவும், பாதுகாக்கவும் மட்டும் சட்ட திருத்தம் கொண்டு வந்திருந்தால் சிறப்பாக இருக்கும். மேலும் சொத்துக்களை மீட்க வக்பு வாரியத்திற்கு அதிகாரமும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், சொத்துக்களை மீட்பதில் சிக்கல் இருந்தால் சொத்துக்களை மீட்க தீர்ப்பாயம் உள்ளது, மேல்முறையீடு செய்ய வேண்டி நிலைவந்தால் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் உள்ளது" எனக் கூறினார்.
சட்டத் திருத்தத்தில் உள்ள சிக்கல்கள் என்ன? தொடர்ந்து பேசிய அவர், "வக்புவாரிய சட்டங்கள் மிக தெளிவாக இருக்கிறது. ஆனால் தற்போது சீர்திருத்தத்தில் மாவட்ட ஆட்சியருக்கு முழு அதிகாரம் கொண்டுவரப்பட்டிருப்பது உகந்ததாக இல்லை. இது அரசியல் சாசனத்தை மீறுவதாக இருக்கிறது.
வக்பு வாரிய சொத்துக்கள் குறித்த தகவல்களை வருவாய் துறையின் அடிப்படையில் உள்ள தரவுகளின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் வழங்கலாம். ஆனால் வக்பு வாரிய சொத்துக்களை குறித்து மாவட்ட ஆட்சியர் முடிவு எடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை.