திருச்சி:திருச்சி காஜாமலை பகுதியில் தமிழ்நாடு அரசின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமான இடத்தை 30 ஆண்டுகள், அதாவது 1994ஆம் ஆண்டு ஜூன் 14-ம் தேதி குத்தகைக்கு எடுத்து எஸ்.ஆர்.எம் ஹோட்டல் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், ஜூன் 13ஆம் தேதியுடன் 30 ஆண்டு கால குத்தகை முடிந்தது.
இந்நிலையில், நேற்று (ஜூன் 14) ஹோட்டலை காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கட்சியினரை உடனடியாக வெளியேற வேண்டும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அரசு அதிகாரிகளுக்கும், ஹோட்டல் நிர்வாகத்தினர் மற்றும் அவர்கள் தரப்பு வழக்கறிஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளுமுள்ளு வரை சென்றது.
இந்த விவகாரம் பேசு பொருளாக மாறிய நிலையில்,பல அரசியல் தலைவர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே இந்த சம்பவம் நடத்திருப்பதாக திமுக அரசை குற்றம் சாட்டினர். இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “திருச்சி மாவட்டம், கொட்டப்பட்டு கிராமத்தில் 4.70 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்திற்கு சொந்தமான பலகோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் எஸ்.ஆர்.எம் ஓட்டல் நிறுவனத்திற்கு, கடந்த 1994-ஆம் ஆண்டில் 30 வருட காலத்திற்கு குத்தகை விடப்பட்டது.
மேற்படி இடம் குத்தகைதாரருக்கு 1994ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி, அன்று ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் ஆகிய இரு தரப்பினரும் சம்மதித்து கையெழுத்திடப்பட்ட இந்த குத்தகை ஒப்பந்தமானது கடந்த 13ம் தேதி, அன்றுடன் முடிவடைந்து விட்டது.
1994ஆம் ஆண்டு குத்தகை வழங்கப்பட்ட அரசாணையின்படி, மேற்படி நிலத்திற்குச் சந்தை விலையின் அடிப்படையில், 7 சதவீதம் வருடாந்திர குத்தகைத் தொகை கணக்கிட்டு, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் 30 ஆண்டு காலத்திற்கு குத்தகைத் தொகை ரூ.47,93,85,941 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதில், நாளது தேதி வரை குத்தகைதாரர் எஸ்.ஆர்.எம். ஓட்டல் நிறுவனம் செலுத்திய தொகை ரூ.9,08,20,104 மட்டுமே.
மீதமுள்ள நிலுவைத் தொகையான ரூ.38,85,65,837-ஐ குத்தகைதாரர் இதுவரை செலுத்தவே இல்லை. இவ்வாறு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தில் 30 ஆண்டுகளாக முழுமையான குத்தகை தொகையைச் செலுத்தாமல் எஸ்.ஆர்.எம். நிறுவனம் தனது ஹோட்டலை தொடர்ந்து நடத்தி வந்துள்ளது.