சென்னை: திராவிட இயக்கங்கள் தமிழ்நாட்டில் ஆலமரம் போல் வேரூன்றியதற்கும், அரை நூற்றாண்டுக்கும் மேலாக தேசிய கட்சிகள் மாநில ஆட்சிக்கு வந்து விடாமல் இருப்பதற்கும் மொழிப்போர் போராட்டங்களே மிக முக்கிய காரணம்.
முதல் மொழிப்போர் போராட்டம்
நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பே, இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் நடந்தது. ஆங்கிலேயர்களுக்கு எதிரான போராட்டங்களுக்கு நடுவே, இந்தி மொழிக்கு எதிராக போராட்ட களம் கண்டவர்கள் தமிழர்கள். 1937-ம் ஆண்டு ஜூலை 14-ந் தேதி சென்னை மாகாண முதல்வராக முதன்முறையாக அரியணையில் ஏறிய ராஜாஜி, இந்தி மொழிக்கு ஆதரவாக வெளியிட்ட ஒரு உத்தரவு அப்போது பெரும் சர்ச்சையை கிளப்பியது. சென்னை மாகாணத்தில் இருந்த 125 பள்ளிகளில் இந்தியை கட்டாயமாக்கி 1938-ம் ஆண்டு ராஜாஜி உத்தரவிட்டார். ராஜாஜியின் உத்தரவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து இந்தி திணிப்புக்கு எதிராக முதன்முறையாக போராட்டங்களை முன்னெடுத்தன. இந்த போராட்டங்களில் பெரியாரோடு சேர்ந்து கலந்து கொண்டார் அறிஞர் அண்ணா. 1938-ம் ஆண்டு ஜூன் மாதம் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு மாநாட்டில் அண்ணா ஆற்றிய உரை, இளைஞர்களை கிளர்ந்தெழச் செய்தது.
இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் கலந்து கொண்டதற்காக 2 முறை கைது செய்யப்பட்ட அண்ணா, சுமார் 13 மாதங்கள் சிறையில் இருந்தார். திராவிட இயக்கங்கள் இதனை முதல் மொழிப்போர் என்று குறிப்பிடுகின்றன. இதில் பெரியார் 19 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்தார். இந்தி எதிர்ப்பு போராட்ட களத்தில் தமிழ் மொழிக்காக முதல் உயிர் தியாகமும் இந்த காலக்கட்டத்தில் தான் நிகழ்ந்தது. சென்னையில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் சிறை சென்ற நடராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மன்னிப்புக் கோரினால் விடுதலை என அரசு கூறியது. ஆனால் தமிழுக்காக உயிர் துறக்கவும் தயார் என நடராஜன், அரசின் நிபந்தனையை ஏற்கவில்லை. பல்வேறு கொடுமைகளுக்கிடையே 1939-ம் ஆண்டு ஜனவரி 15-ந் தேதி சிறையிலேயே உயிரிழந்தார் நடராஜன்.
இதே போல், சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த கும்பகோணத்தைச் சேர்ந்த தாளமுத்துவும் அதே ஆண்டு மார்ச் மாதம் 12-ம் தேதி உயிரிழந்தார். நடராஜன் மற்றும் தாளமுத்து ஆகியோரின் உயிர் தியாகத்தால் சென்னை மாகாணத்தில் தீவிரமடைந்தது இந்தி எதிர்ப்புப் போராட்டம். இதனையடுத்து இந்தியை கட்டாயப் பாடமாக்கிய அரசாணையை 1940ம் ஆண்டு திரும்பப் பெற்றது ராஜாஜி அரசு.
சுதந்திரத்திற்குப் பின் முதல் போராட்டம்
1948-ம் ஆண்டு சென்னை மாகாண முதலமைச்சராக இருந்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் வெளியிட்ட உத்தரவு, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு மீண்டும் வழி வகுத்தது. மாநிலம் முழுவதும் திராவிடர் கழகம் சார்பில் இந்தி திணிப்பு எதிர்ப்பு மாநாடு நடத்தப்பட்டது. இதற்கு அறிஞர் அண்ணா தலைமை தாங்கினார். அப்போது கருணாநிதியும் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்று இந்தி திணிப்புக்கு எதிராக முழக்கமிட்டார். அப்போது நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜிக்கு எதிராக கறுப்புக் கொடியும் காட்டப்பட்டது.
இந்தி எதிர்ப்பில் இணைந்து பயணித்த திக - திமுக
1949-ம் ஆண்டு பெரியாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் திமுகவை நிறுவினார் அண்ணா. எனினும் இந்தி எதிர்ப்பு போராட்டங்களில், திமுகவும், திராவிடர் கழகமும் இணைந்தே பயணித்தன. 1952-ம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்கள் மற்றும் மத்திய அரசு அலுவலகங்களின் பெயர் பலகைகளில் இந்திக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து இந்தி எழுத்துக்களை தார்ப்பூசி அழிக்கும் போராட்டத்தில் திமுகவும், திராவிடர் கழகழும் இணைந்து களம் கண்டன. பெரியார், அண்ணா, கருணாநிதி, நெடுஞ்செழியன் உள்ளிட்ட தலைவர்களின் தலைமையில் மாநிலம் முழுவதும் நடந்த போராட்டங்களின் போது பெரும்பாலான ரயில் நிலையங்களின் பெயர் பலகைகளில் இடம் பெற்றிருந்த இந்தி எழுத்துக்கள் அழிக்கப்பட்டன.
போராட்டங்களை ஒடுக்க வந்த ராணுவம்
1965-ம் ஆண்டில் தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டக் களம் மிகவும் தீவிரமாக இருந்தது. காரணம் 1963-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த ஆட்சி மொழி மசோதா. இந்தியை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த மசோதாவைக் கண்டித்து 1964-ம் ஆண்டு ஜனவரி 25-ம் தேதி அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரைச் சேர்ந்த சின்னச்சாமி என்ற திமுக தொண்டர் தீக்குளித்தார். திருச்சி ரயில் நிலையம் எதிரே நடந்த இந்த சம்பவம், இந்தி எதிர்ப்பை மக்கள் போராட்டமாக மாற்றியது. சின்னச்சாமியின் முதலாவது நினைவு நாள் அன்று, தமிழ்நாட்டில் பெரும் கிளர்ச்சியாக இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது. மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டங்கள் உக்கிரம் அடைந்தன. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் ஆவேசமான பேச்சுக்கள் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தின.