சென்னை: நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரண வழக்கில் இன்னும் மர்மம் நீடித்து வருகிறது. வழக்கை விசாரிக்க 10 தனிப்படைகள் அமைக்கட்டிருந்த நிலையில் கூடுதலாக சில அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சில தினங்களுக்கு முன்பு ஜெயக்குமார் வழக்கின் விசாரணை நிலையை பற்றி விவரித்த தென்மண்டல ஐஜி கண்ணன் பேசும்போது, ஜெயக்குமார் வழக்கு தற்போது வரை சந்தேக மரணம் என்றுதான் பதியப்பட்டுள்ளது. டிஎன்ஏ, உடற்கூறாய்வு உள்ளிட்ட முழு அறிக்கைகள் வந்த பிறகே வழக்கு முன்னேறி நகரும் என்றார்.
பரபர குற்றசசாட்டு: இதற்கிடையே ஜெயக்குமார் வழக்கில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், ஜெயக்குமாரின் வழக்கை தற்கொலை வழக்காக மாற்றும் முயற்சியில் காவல்துறையினர் செயல்படுவதாக தமிழ்நாடு சத்ரிய நாடார் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.
தமிழ்நாடு சத்ரிய நாடார் இயக்க நிறுவன தலைவர் சந்திரன் ஜெயபால் இன்று தமிழக காவல்துறை இயக்குனர் சங்கர் ஜிவாலை சந்தித்து புகார் மனு அளித்தார்.
சந்தேகம்: அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது, ''நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங் கொலை வழக்கை, தற்கொலை வழக்கு என்ற கோணத்திலேயே போலீசார் விசாரித்து வருவதாக குற்றம் சாட்டினார். ஜெயக்குமார் பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலைக்கான சாத்தியகூறு இருப்பதாக முழுமையாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், போலீசார் தற்கொலை என்ற கோணத்திலேயே விசாரணை நடத்தி வருவதாக சந்தேகம் எழுந்துள்ளது என்றார்.
மேலும், ஜெயக்குமார் கொலை வழக்கில் பல அரசியல் பிரமுகர்கள் தலையீடு இருப்பதாலேயே, தமிழக போலீசார் இந்த கொலை வழக்கை விசாரிப்பதில் மெத்தனம் காட்டுகின்றனர். ஜெயக்குமார் வழக்கில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், சிபிசிஐடி விசாரணை நடத்த தமிழக முதலமைச்சரிடம் மனு அளிப்போம்'' என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க:என்ட்ரி தரும் 'புலனாய்வு எக்ஸ்பர்ட்'... சூடுபிடிக்கும் நெல்லை ஜெயக்குமார் வழக்கு!