சென்னை: சென்னை, அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் உத்தரவின் பெயரில், மூன்று பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புனாய்வு குழு (SIT) அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் அண்ணா பல்கலைக் கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கு மற்றும் இந்த வழக்கு குறித்தான முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (ஜன.4) இந்த வழக்கில் கைதாகியுள்ள ஞானசேகரன் வீட்டில் சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு இயந்திரம் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், இந்த வழக்கில் வெளியான முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த 'யார் அந்த சார்' என்ற நபர் திருப்பூரைச் சேர்ந்தவர் என்றும் அவருக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும் சமூக ஊடகங்களிலும் சில செய்தி ஊடகங்களிலும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், இந்த அனைத்து தகவல்களும் ஆதாரமற்றவை என தமிழ்நாடு காவல்துறை தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக காவல் துறை அதிகாரிகள் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சில செய்தி ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில், ஞானசேகரன் ஒரு சாரிடம் பேசியதாக பாதிக்கப்பட்ட மாணவி தெரிவித்ததாகவும், ஆபாச பதிவுகள் கொண்ட மின்னணு உபகரணங்களை சிறப்பு புலனாய்வு குழு அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும், திருப்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் போன்ற ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.