சென்னை:சென்னையில் உள்ள அண்ணாநகர், ஜே.ஜே நகர், திருமழிசை, திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் பிரபல தனியார் பள்ளிகளுக்கு, இன்று காலை சுமார் 11 மணியளவில், பள்ளி நிர்வாக அலுவலகத்தின் இமெயிலுக்கு ஒரு மெயில் வந்துள்ளது.
அந்த மெயிலில், “உங்கள் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளேன். இன்னும் சிறிது நேரத்தில் வெடிக்க உள்ளது” என மர்ம நபரால் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம், இந்த மெயில் குறித்து அண்ணா நகர், திருமங்கலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் அண்ணா நகர், ஜே.ஜே நகர், திருமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் இயங்கி வரும் 4 தனியார் பள்ளிகளுக்கும் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்களை வரவைத்து, தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.
தற்போது நான்கு தனியார் பள்ளிகளிலும் அறைகள், வளாகம் முழுவதும் மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே இந்த 4 பள்ளிகளிலும் பயின்று வரும் பள்ளி மாணவ, மாணவிகளை பத்திரமாக வெளியேற்றி, அவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்து வீட்டிற்கு அனுப்பும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், தனியார் பள்ளியில் தீவிரமாக சோதனை செய்து வந்த நிலையில், போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இமெயிலில் வந்த வெடிகுண்டு மிரட்டல் ஒரு புரளி என தெரிய வந்துள்ளது. இருந்தபோதிலும், தனியார் பள்ளி வளாகம் முழுவதும் தீவிரமாக சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: மத்திய அரசின் வரிப் பகிர்வு; புள்ளி விவரங்களுடன் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்திய எம்பி வில்சன்!