தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம்; ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை - ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தம்

Jacto-Geo Protest: தொடர் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்களுடன் இன்று அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

Tamil Nadu Ministers hold talks with protest Jacto Jio
ஜாக்டோ ஜியோ அமைப்பினருடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை

By ETV Bharat Tamil Nadu Team

Published : Feb 13, 2024, 10:13 AM IST

சென்னை: ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்து அதற்குரிய ஆயத்தப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஜனவரி 30ஆம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்திய ஜாக்டோ ஜியோ அமைப்பினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கான செய்முறை தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் அனைத்து மாவட்டங்களில் வரும் 15ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். பிப்ரவரி 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவதற்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு அரசின் சார்பில் அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை இன்று தலைமைச் செயலகத்தில் அழைத்துப் பேச உள்ளனர்.

ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோரிக்கைகள்

  • கடந்த 2003 ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.
  • காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
  • இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
  • முதுநிலை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும்.
  • கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு (CAS) ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்த்த வேண்டும்.
  • சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நுாலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எம்ஆர்பி (MRB) செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியார்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
  • அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
  • 2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக் காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
  • சாலைப் பணியர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளிலும், பல்வேறு அரசுத்துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியார்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும்.

இதையும் படிங்க: வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் ஜாக்டோ ஜியோ கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும் - மாநில ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்!

ABOUT THE AUTHOR

...view details