சென்னை :தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுகலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. அதில், ஒருசில பாடப் பிரிவுகளை தவிர மற்ற பிரிவுகளுக்கான சேவை ஒதுக்கீட்டு இடங்களை ரத்து செய்வதாக அரசாணை 151ஐ மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அகிலன் பேட்டி (Credits - ETV Bharat Tamil Nadu) இதுகுறித்து தமிழ்நாடு மருத்துவ அலுவலர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் அகிலன் கூறும்போது, "அரசு மருத்துவர்களுக்கு முதுகலை படிப்புகளில் வழங்கப்படும் 50 சதவீதம் இடதுக்கீடு ரத்து செய்யப்பட்டது மிகுந்த வருத்ததை அளிப்பதாகவும், இதனால் கிராமப்புறம் மற்றும் மலைப்பகுதியில் சிறப்பு மருத்துவ சேவை பாதிக்கப்படும்.
கடந்த 2017 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்ட இந்த சேவை ஒதுக்கீட்டை 3 ஆண்டு காலம் நீதிமன்றத்தில் போராடி முதுகலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத ஒதுக்கீடு பெற்றப்பட்டது.
குறிப்பிட்ட மருத்துவப் பிரிவில் மட்டும் 50 சதவீதம் இட ஒதுக்கீட்டு என்பது நியாயமற்றது. மேலும், இதே நிலை தொடர்ந்தால் சேவை அடிப்படையில் இட ஒதுக்கீடே இருக்காது என்ற நிலை ஏற்படுமோ என்ற அச்சமும் உள்ளது.
எனவே, முதுகலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித சேவை இடஒதுக்கீட்டை சட்டமாக்க வேண்டும்.
அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீதம் இட ஒதுக்கீட்டை பெறுவதற்காக 21 நாட்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி, உச்சநீதிமன்றம் சென்று தீர்ப்பை பெற்றோம். அதன் அடிப்படையில் போடப்பட்ட அரசாணை 463ஐ சட்டமாக தமிழ்நாடு அரசு இயற்ற வேண்டும்.
நீட் தேர்வினை எதிர்த்து தமிழ்நாடு அரசு சட்டம் இயற்றி எதிர்ப்பை தெரிவிப்பது போல், அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்கும் சட்டம் இயற்ற வேண்டும். முதுகலை முருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கு முன்பே இந்த சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். நீட் தேர்வு சமூக நீதிக்கு எதிரானது போல, இந்த சேவை ஒதுக்கீடும் சமூக நீதிக்கு எதிரானது.
அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவர்களை நியமனம் செய்ய போதுமான இடம் இல்லாவிட்டால் புதிய இடங்களை உருவாக்க வேண்டும். மேலும், பணியில் உள்ள மருத்துவர்கள் ஓய்வு பெறும் போது ஏற்படும் காலிப் பணியிடங்களிலும் சிறப்பு மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும்.
கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில் புதியதாக தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களில் பணியிடமாறுதல், கலந்தாய்வின் மூலம் சிறப்பு மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டனர். அதேபோல் புதிய மருத்துவக் கல்லூரிகளில் போதுமான அளவில் மருத்துவர்கள் நியமனம் செய்யப்படவில்லை. அதுபோன்ற பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
மக்கள் தொகைக்கு ஏற்ப சிறப்பு மருத்துவப் பணியிடங்களை உருவாக்க வேண்டும். அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீதம் இட ஒதுக்கீட்டிற்காக தொடர்ந்து போராடியது எங்கள் சங்கம் தான். ஆனால் எங்களை அழைத்து பேசாமல் சில சங்கத்தை அழைத்து பேசியதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
சமூக நீதி பேசும் திராவிட மாடல் அரசு, அரசு மருத்துவர்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்கும் வகையில் அரசு கொண்டு வந்துள்ள அரசாணை 151 ஐ ரத்து செய்யாவிட்டால் அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக போராட்டம் நடத்த திட்டமிட்டு இரு்கிறோம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க:“வடஇந்திய மக்களும் பாஜகவுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர் ” - ஜவாஹிருல்லா - M H Jawahirullah