தமிழ்நாடு வாக்குப்பதிவு நிலவரத்தில் முரண்பாடு.. தேர்தல் ஆணையம் வெளியிட்ட புதிய தகவல்! - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024
Percentage of Total Votes Cast in Tamil Nadu:தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் நேற்று மாலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் கூறியிருந்த நிலையில் இரவில் வெளியிட்ட தகவலில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகள் உட்பட நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள், 1 யூனியன் பிரதேசம் என மொத்தம் 102 தொகுதிகளுக்கு நேற்று மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்தது. தற்போது, நேற்று நிறைவடைந்த முதற்கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டில் மொத்தம் 69.46 விழுக்காடு பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் சுமார் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 பேர் வாக்களிக்க மாநிலம் முழுவதும் 68 ஆயிரத்து 321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. நேற்று 7 காலை விறுவிறுப்பாகத் துவங்கிய வாக்குப்பதிவில் முதல்முறை வாக்காளர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பலரும் உற்சாகமாக வந்து வாக்களித்துவிட்டுச் சென்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் பிரமுகர்களும், திரைப்பிரபலங்களும் என அனைவரும் அவரவர் தொகுதிகளில் மக்களுடன் மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். மதியம் 1 மணி நிலவரப்படி மொத்தமே 35.14 சதவீத வாக்குகளே பதிவாகியிருந்தது.
அதனைத் தொடர்ந்து, கோடைக் வெயில் காரணமாக மதியத்திற்கு மேல் வாக்குப்பதிவு மையங்கள் மத்தமாகவே காணப்பட்டது. வெயில் குறைந்த நிலையில், மாலையில் மீண்டும் வாக்குப்பதிவு சூடுபிடித்தது. மக்கள் வாக்குச் சாவடியை நோக்கி படையெடுத்து வந்தனர். மாலை 6 மணியைத் தாண்டியும் கூட்டம் வாக்குச்சாவடியில் காணப்பட்டது. சில இடங்களில் 6 மணிக்கு முன்னர் வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.
மாலை 7 மணி நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குகள் பதிவானதாகத் தகவல்கள் வெளியானது. அதனைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பதிவான மொத்த வாக்குப்பதிவு 69.46 சதவீதம் என இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்தது. ஆனால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலை விட இம்முறை குறைந்த அளவிலான வாக்குகளே பதிவாகியுள்ளது எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதாவது, கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 72.44 சதவீத வாக்குகள் வதிவான நிலையில், தற்போது 2024ஆம் ஆண்டு தேர்தலில் கிட்டத்தட்ட 3 சதவீதம் வாக்குகள் குறைவாகவே பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், சில இடங்களில் இயந்திரக்கோளாறு, வாக்குவாதம் என நடைபெற்றாலும், பல்வேறு தொகுதிகளில் வாக்குப்பதிவு சுமுகமாக நிறைவடைந்து வாக்கு செலுத்திய பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.
இதற்கிடையே நேற்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, மாலை 6 மணிக்கு மேல் பல வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் வாக்குகளைச் செலுத்தினர் எனவும், வாக்குச்சாவடியில் கடைசி வாக்காளர்கள் இருக்கும் வரை வாக்களிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது எனவும், தற்போது கிடைத்துள்ள சதவீதத்தில் தபால் ஓட்டுகள் சேர்க்கப்படவில்லை, சரியான விவரங்கள் இன்று(சனிக்கிழமை) காலை 12 மணிக்கு தெரிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அதிகபட்சமாகத் தருமபுரியில் 81.48 சதவீதம் வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னையில் 53.91 வாக்குகளும் பதிவாகியுள்ளது. தேர்தல் ஆணையம் சார்பில் அதிகளவில் விழிப்புணர்வு அளிக்கப்பட்ட நிலையிலும் எந்த தொகுதியிலும் 100 சதவீதம் வாக்குப் பதிவாகவில்லை என்பதும், வழக்கம்போல் சென்னையிலேயே மிகக்குறைந்த அளவு வாக்குகள் பதிவாகியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் தொகுதிவாரியாக பதிவான வாக்குப்பதிவு விவரம்: