போட்டியில் வெற்றி பெற்று நாடு திரும்பிய வீராங்கனைகள் காட்சி (credits - ETV Bharat Tamil Nadu) சென்னை: மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே போட்டியில் 22 பதக்கங்கள் வென்று சாதனை படைத்து சென்னை திரும்பிய தமிழக வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்வு அளிக்கப்பட்டது.
மலேசியா நாட்டில் இப்போ நகரில் 20வது சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் மலேசியா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா, சிங்கப்பூர், நேபாளம் உள்ளிட்ட பத்து நாடுகளைச் சேர்ந்த 1,500 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
இதில் இந்தியா சார்பாக, தமிழகத்தைச் சேர்ந்த சாய் அக்ஷரா அகாடமி சார்பாக, ஆல் இந்தியா கராத்தே டோ ஜூரியோ அசோசியேஷனைச் சேர்ந்த 11 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் கரேத்தே போட்டிகள் கட்டா, கும்மி, டீம் கட்டா என மூன்று பிரிவுகளில் நடத்தப்பட்டன.
இதில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் 28 போட்டிகளில் பங்கேற்று, 4 தங்கப்பதக்கம், 7 வெள்ளிப்பதக்கம், 11 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 22 பதக்கங்கள் வென்று சாதனை படைத்துள்ளனர். இதையடுத்து, மலேசியாவில் இருந்து நாடு திரும்பிய வீராங்கனைகளுக்கு சென்னை விமான நிலையத்தில் மாலை அணிவித்து, பூங்கொத்து கொடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய கராத்தே பயிற்சியாளர் சீனிவாசன் கூறுகையில், “மலேசியாவில் நடந்த சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பாக தமிழகத்தைச் சேர்ந்த 11 வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இதில் உஸ்பெகிஸ்தான், மலேசியா ஆகிய நாடுகளுடன் நமது வீராங்கனைகள் விளையாடும் போது போட்டி மிகவும் கடுமையாக இருந்தது. இருந்தபோதிலும், கடுமையான பயிற்சி எடுத்ததன் மூலம் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், அடுத்தடுத்து வரக்கூடிய காமன்வெல்த், தெற்காசியா, ஒலிம்பிக் போன்ற போட்டிகளிலும் கலந்து கொண்டு, நாட்டுக்காக தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்பது எங்களது குறிக்கோளாக உள்ளது. தமிழக அரசு தொடர்ந்து விளையாட்டுத் துறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மலேசியாவில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்று வந்துள்ள வீராங்கனைகளுக்கு தமிழக அரசு ஊக்கம் அளித்து உதவிகள் செய்ய வேண்டும்” இவ்வாறு கோரிக்கை வைத்தார்.
தொடர்ந்து, போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகள் கூறுகையில், “மலேசியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கங்கள் வென்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. கராத்தே போன்ற கலைகள் நம்முடைய தற்காப்புக்காக கற்றுக் கொள்ளப்படுகிறது. எனவே, அனைத்து பெண்களும் இதை கற்றுக் கொள்ள வேண்டும்” இவ்வாறு தெரிவித்தனர்.
இதையும் படிங்க:கோடை கால சிறப்பு ரயில்! ராஜபாளையம் வந்தடைந்த தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு ரயிலுக்கு உற்சாக வரவேற்பு! - Tambaram Kochuveli Special Train